Published:Updated:

875 கிராம் எடையில் பிறந்த குழந்தை... சிறப்பான சிகிச்சையால் மீட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனை!

குறைவான எடையுடன் பிறந்த குழந்தை
குறைவான எடையுடன் பிறந்த குழந்தை

குழந்தையின் எடை அதிகரிப்பதற்காகக் 'கங்காரு தாய்' கவனிப்பு முறையில் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. 48 நாள் தொடர் சிகிச்சையின் பலனாக 1 கிலோவுக்கும் மேல் குழந்தையின் எடை கூடியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே மறவன்பட்டியைச் சேர்ந்த முத்துவீரன், இந்திராணி தம்பதிக்குக் கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவம் மூலம் குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. 875 கிராம் எடை மட்டுமே இருந்த மூச்சுவிடவே சிரமப்பட்ட அந்தக் குழந்தையை ஆபத்தான நிலையிலிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவனை மருத்துவர்கள் காப்பாற்றியதோடு, எடையை அதிகரிக்கவும் செய்திருக்கின்றனர். குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.

875 கிராம் எடையில் பிறந்த குழந்தை... சிறப்பான சிகிச்சையால் மீட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனை!

இதுபற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பூவதி கூறும்போது, "875 கிராமில் குறைந்த எடையுடன் குறை மாதத்தில் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்குத் தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்ததால், வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், நுரையீரல் வளர்ச்சிக்காக, சர்ஃபேக்டன்ட் (surfactant) மருந்து நுரையீரலுக்குச் செலுத்தப்பட்டது.

ஒரு வார கால தீவிர சிகிச்சையின் பலனாகக் குழந்தை சுவாசிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு குழந்தைக்குக் குழாய் மூலம் சிறிதளவு பால் கொடுக்கப்பட்டது. அதோடு, மஞ்சள் காமாலைக்கான போட்டோதெரபி சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. மூச்சுத்திணறல் பிரச்னை சரியானவுடன் முதலில் ஸ்பூன் மூலம் தாய்ப்பால் வழங்கப்பட்டு, பின்னர் நேரடியாகக் குழந்தையின் அம்மாவே தாய்ப்பால் கொடுத்தார்.

875 கிராம் எடையில் பிறந்த குழந்தை... சிறப்பான சிகிச்சையால் மீட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனை!

குறிப்பாக, குழந்தையின் எடை அதிகரிப்பதற்காக 'கங்காரு தாய்' கவனிப்பு முறையில் பராமரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மருத்துவ அறிவுரைப்படி தாய் குழந்தையை தன்னோடே அணைத்திருக்கும் ஒரு பராமரிப்பு முறை. அதோடு, கண், செவித்திறன் மற்றும் மூளைக்கான ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது. 48 நாள்கள் தொடர் சிகிச்சையின் பலனாக 1 கிலோவுக்கும் மேல் குழந்தையின் எடை கூடியிருக்கிறது. தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக்குழுவின் பணி பாராட்டுக்குரியது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு