Published:Updated:

திருவள்ளுவர் தினத்தில் ஒரு ரூபாய்க்கு டீ... புதுக்கோட்டை டீக்கடைக்காரரின் நேசக்கரம்!

திருவள்ளுவர் தினத்தில் ரூ.1-க்கு டீ
திருவள்ளுவர் தினத்தில் ரூ.1-க்கு டீ

திருக்குறளோட பெருமையை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் எனது கடையில் டீ குடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1-க்கு மட்டுமே விற்பனை செய்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பரவாக்கோட்டையில், பொறியியல் பட்டதாரி இளைஞர் அடைக்கலம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்களுக்குச் சுத்தமான பசும்பாலில் மட்டுமே டீ கொடுத்து வரும் அடைக்கலம், திருவள்ளுவர் தினத்தையொட்டி, ஜனவரி 15-ம் தேதி தனது டீக்கடையில் டீ குடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1-க்கு மட்டுமே டீ விநியோகம் செய்து அசத்தினார்.

திருவள்ளுவர் தினத்தில் வழங்கப்பட்ட மரக் கன்றுகள்
திருவள்ளுவர் தினத்தில் வழங்கப்பட்ட மரக் கன்றுகள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைத்து தரப்பினரும் டீ குடித்துவிட்டு அடைக்கலத்தை வாழ்த்திவிட்டுச் சென்றனர். அதோடு, பரவாக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் நலன் இயக்கத்தினர் டீ குடிக்க வரும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அசத்தினர். திருவள்ளுவரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் செயல்பட்ட பரவாக்கோட்டை, கரிசக்காடு இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

இதுபற்றிக் கூறிய டீ கடை உரிமையாளர் அடைக்கலம், "பொறியியல் படிச்சிட்டு வேலைக்காக, கம்பெனி, கம்பெனியா அலைந்த பல இளைஞர்கள்ல நானும் ஒருத்தன். வேலை கிடைக்கலைன்னாலும், சோர்ந்து போகலை. ஊர்லயே சொந்தமாக டீக்கடை வச்சு வாடிக்கையாளர்கள் ஆதரவால் இன்னைக்கு பேக்கரி, ஹோட்டல்னு டெவலப் பண்ணியிருக்கேன். வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளாவது நம்மால முடிஞ்சத செய்யணும்னு தோணுச்சு. அப்பதான், ஒவ்வொரு திருவள்ளுவர் தினத்தன்னைக்கும் நம்ம கடையில ரூ.1-க்கு டீ கொடுக்கலாம்ங்கிற ஐடியா வந்துச்சு.

டீ கடை
டீ கடை

தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளோட பெருமையை பொதுமக்கள்கிட்ட எடுத்துச் சொல்லும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் எனது கடையில் டீ குடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1-க்கு மட்டுமே விற்பனை செய்கிறேன். கடந்த வருஷத்தைப் போல இந்த வருஷமும் வாடிக்கையாளர்களோட நிறைய ஆதரவு இருந்துச்சு. வழக்கமாக என்னோட கடையில டீ 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல, எங்க ஊரைச் சேர்ந்த மக்கள் நலன் இயக்கத்தினர் மரக்கன்றுகளைக் கொடுத்தாங்க. ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இதுபோல செய்யணும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு