Published:Updated:

``அண்ணன் எங்கனு கேட்டா மகளுக்கு என்ன சொல்வேன்?" - உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் தாய்

சிறுவனின் தாய்
News
சிறுவனின் தாய்

``புகழேந்தி, 6 வயசு வரைக்கும் பேசவே இல்லை. அம்மா, அப்பான்னுகூட கூப்பிட மாட்டான். பேச்சே வரலை. நாங்க ஏறி, இறங்காத கோயில், குளமே இல்லை. நிறைய மருத்துவமனைகளுக்கும் கூட்டிக்கிட்டுப் போனோம். 7 வயசு ஆரம்பிச்சப்போதான், திடீர்னு அவனுக்குப் பேச்சு வந்து, பேச ஆரம்பிச்சான்."

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், கடந்த 30-ம் தேதி மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் 34 பேர் மற்றும் தமிழக போலீஸார் 18 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா, சுமார் 2 கி.மீ தொலைவில், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி (11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த சிறுவனை தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் போராடிய அறுவைசிகிச்சை மருத்துவர் குழு, சிறுவனின் தலைப்பகுதியில் மூளைக்கு அருகே இருந்த தோட்டாவை அகற்றியது.

சிறுவன் புகழேந்தி
சிறுவன் புகழேந்தி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிறுவன் புகழேந்தி எப்படியும் பிழைத்துக்கொள்வான் என்று தொடர் சிகிச்சையையும் மேற்கொண்டனர். ஆனால், நேற்று மாலை புகழேந்தி சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 5 நாள்களாக, எப்படியும் பிழைத்து வந்துவிடுவான் என்று இரவு, பகலாக மருத்துவமனையில் காத்திருந்த சிறுவன் புகழேந்தியின் உறவினர்கள், இறப்புச் செய்தி கேட்டு மனமுடைந்து போயினர்.

சிறுவனின் தாய் பழனியம்மாளிடம் பேசினோம். ``மருத்துவர்கள் கடைசி வரைக்கும் எப்படியும் என் பிள்ளையைக் காப்பாத்திக் கொடுத்திடுவாங்கன்னு நம்பிக்கையில இருந்தேன். திடீர்னு, இறந்துட்டதா சொல்லிட்டாங்க. என் கையால அவனைத் தொட்டுக்கூட பார்க்க முடியல.

கடைசி நேரத்துலயாவது என் பிள்ளை பக்கத்துல இருந்திருப்பேன். அதுக்கும் யாரும் அனுமதிக்கலை. கடைசி வரை அவன் பக்கத்துல இருக்க எனக்குக் கொடுத்து வைக்காமலே போயிருச்சே. என் மகளுக்கு அண்ணன்னா அவ்வளவு உசுரு. அவளுக்கு இதுபத்தி எதுவும் தெரியாது. அண்ணன் எங்கம்மான்னு அவ கேட்டா நான் என்ன சொல்றது? அவ அண்ணனை நெனச்சு அவளுக்கு ஏதாவது ஆகிருமோன்னும் பயமா இருக்கு. எப்படி இதுலயிருந்து மீண்டு வரப்போறேன்னு தெரியல" என்றவருக்குக் கண்ணீர் பெருக்கெடுக்க, அதற்கு மேல் பேச்சு வரவில்லை.

சிறுவன் புகழேந்தியின் பெரியப்பா ரவிச்சந்திரன், ``அரையாண்டு லீவு விட்டதால, அவங்க அம்மாச்சி வீட்டுக்குப் போயிருந்தான். எப்பவும் துறுதுறுன்னுதான் இருப்பான். சேட்டை எல்லாம் செய்ய மாட்டான். நல்லா படிப்பான். என் மகளவிட, அவன் ஆறு மாசம் மூத்தவன். ரெண்டு பேரும் ஒண்ணாதான் ஸ்கூலுக்குப் போவாங்க. சின்ன பையனா இருந்தாலும், சாயந்தரம் பிள்ளைய கையோட பத்திரமா வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டுடுவான்.

புகழேந்தியின் பள்ளி
புகழேந்தியின் பள்ளி

புகழேந்தி, 6 வயசு வரைக்கும் பேசவே இல்லை. அம்மா, அப்பான்னுகூட கூப்பிட மாட்டான். பேச்சே வரலை. நாங்க ஏறி, இறங்காத கோயில் குளமே இல்லை. நிறைய மருத்துவமனை களுக்கும் கூட்டிக்கிட்டுப் போனோம். இப்படியே பேச்சு வராமலே போயிடுமோன்னு பயந்துகிட்டு இருந்தோம். ஆனா, எப்படியும் பேச்சு வந்திரும்னு சொன்னாங்க. அதுமாதிரி 7 வயசு ஆரம்பிக்கும்போதுதான், திடீர்னு அவனுக்குப் பேச்சு வந்து, பேச ஆரம்பிச்சான். அது மாதிரியே இப்பவும் எப்படியும் மீண்டு வந்திடுவான்னு காத்துக்கிட்டுக் கெடந்தோம். ஆனா, இப்படி எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டுப் போயிட்டானே'' என்று கதறி அழுதார்.

சிறுவன் புகழேந்தியின் வகுப்பாசிரியை விஜியிடம் பேசினோம். ``பால்வாடியில் இருந்து இப்போ வரை கொத்தமங்கலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலதான் புகழேந்தி படிக்கிறான். அவனுக்கு மூன்றாவது படிக்கிற வரைக்குமே சரியா பேச்சு வரலை. அதனால நிறைய பயிற்சி கொடுப்போம். அதுக்கு அப்புறம் பேச ஆரம்பிச்சுட்டான். வீட்டுப்பாடத்தை முதல் ஆளா செய்வான். நல்லா படிப்பான். தேவையில்லாம லீவ் போடாம ரெகுலரா பள்ளிக்கு வர்ற பையன். அவனோட இறுதி ஊர்வலத்துல கலந்துக்கிட்டப்போ, மனசெல்லாம் விட்டுப்போச்சு'' என்றார் பாரத்துடன்.

இதற்கிடையே, துப்பாக்கித் தோட்டா பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.