Published:Updated:

நான்கு குழந்தைகள், தத்தளித்த லாரி டிரைவர்... பள்ளி நண்பர்கள் தீபாவளிக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பள்ளி நண்பர்களால் ஓட்டுநருக்கு கிடைத்த தீபாவளிப்பரிசு
பள்ளி நண்பர்களால் ஓட்டுநருக்கு கிடைத்த தீபாவளிப்பரிசு

''4 பிள்ளைகளை வச்சிக்கிட்டு அந்தக் குடிசை வீட்டுக்குள் இருக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதைப் பார்த்திட்டு எனக்கு ரொம்ப சங்கட்டமா போயிடுச்சு. ''

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே கொட்டகைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். ஓட்டுநரான இவருக்கு மனைவி, 2 ஆண், 2 பெண் என நான்கு குழந்தைகள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலால், முத்துக்குமாரின் குடிசை வீடு முழுமையாகச் சேதமடைந்துவிட்டது. முத்துக்குமாருக்கோ, வீட்டை எடுத்துக் கட்டமுடியாத நிலை. இத்தனை நாட்களாகத் தார்ப்பாய் கொண்டு கூரைவீட்டிற்கு ஒட்டுப் போட்டு, வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருந்த முத்துக்குமாருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் மூலம் புதுவீடு, புதுவாழ்வு கிடைத்திருக்கிறது.


நண்பர்கள் கட்டிக்கொடுத்த வீடு
நண்பர்கள் கட்டிக்கொடுத்த வீடு

வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, அதில் தங்களுடன் படித்த மாணவர்களை இணைத்து, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பணத்தைக் கொடுத்து முத்துக்குமாருக்கு வீடு கட்டிக்கொடுத்து உதவியிருக்கின்றனர்.

முத்துக்குமாருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணியை முன்னெடுத்த நாகேந்திரனிடம் பேசினோம். "புதுக்கோட்டை டி.இ.எல்.சி பள்ளியில 1988-லிருந்து 94-வரைக்கும் எல்லாம் ஓண்ணா படிச்சோம். இப்போ, போலீஸ், வக்கீல், மருத்துவம்னு எங்களோட படிச்சவங்க பல்வேறு துறைகளிலும் இருக்காங்க. சிலர் இங்கவும், சிலர் வெளிநாடுகள்லயும் வேலை செய்றாங்க.

நான் கூட ரொம்ப வருஷம் வெளிநாட்டில் இருந்துட்டுதான் வந்தேன். மச்சுவாடி பகுதியில் எங்களுக்குப் பாடம் எடுத்த சுடர்மணி டீச்சரைப் பார்க்கிறதுக்காகப் போனேன். அப்போ, தான் முத்துக்குமாரோட ஞாபகம் எனக்கு வந்துச்சு. வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். குடிசை வீடு ரொம்பவே சேதமடைஞ்சு இருந்துச்சு. முத்துக்குமார் தன்னோட வீட்டுக் கூரை மேல தார்ப்பாயை மூடி ஒட்டுப்போட்டுருந்தான். 4 பிள்ளைகளை வச்சிக்கிட்டு அந்தக் குடிசை வீட்டுக்குள் இருக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதைப் பார்த்துட்டு எனக்கு ரொம்ப சங்கட்டமா போயிடுச்சு. அப்பதான், அவனுக்கு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வீடு கட்டிக்கொடுக்கலாம்ங்கிற எண்ணம் வந்துச்சு. ஏற்கெனவே, நண்பர்கள் எல்லாம் இருக்கிற வாட்ஸ் அப் குழு இருக்கு. ஆனாலும், முத்துக்குமாருக்கு வீடு கட்டிக்கொடுக்கிறதுக்காக, புதுசா வாட்ஸ் அப் குழுவை உருவாக்கினேன்.


நண்பர்கள் கட்டிக்கொடுத்த வீடு
நண்பர்கள் கட்டிக்கொடுத்த வீடு

அதில், எங்களோட டி.இ.எல்.சி பள்ளியில் படிச்ச நண்பர்கள் பலரையும் இணைச்சேன். யாரையும் வற்புறத்தல. ஆனா, முத்துக்குமாரோட நிலையைச் சொன்னதும் உடனே நண்பர்கள் உதவ முன்வந்தாங்க. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற முதல் பணத்தைக் கொடுத்தாங்க. சில நண்பர்கள் சிமென்ட், ஜல்லின்னு பொருட்களாகவும் கொடுத்தாங்க. மொத்தமா 1.50 லட்சம் ரூபாய் கிடைச்சது. அதை வச்சு வீடு கட்டும் பணியை ஆகஸ்ட்ல ஆரம்பிச்சோம். நவம்பர்ல நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வீட்டைக் கட்டி முத்துக்குமார் கையில் ஒப்படைச்சிட்டோம். இது சின்ன விஷயம் தான். இன்னும் பெருசா ஏதாவது செய்யணும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நண்பர்களின் உதவி குறித்து முத்துக்குமாரிடம் பேசினோம். "காதல் திருமணம் செஞ்சதால ரெண்டு வீட்டின் சப்போர்ட்டும் எங்களுக்கு கிடைக்கல. நான் லாரி டிரைவரா இருக்கேன். கஜா புயலுக்கு முன்னாடி வரைக்கும் குடிசை வீடு நல்லா தான் இருந்துச்சு. புயல்ல, மரம் விழுந்ததுல தான் ரொம்ப சேதமாகிடுச்சு. நானும் ஒரு வருஷமா வீட்டை சீரமைச்சிடலாம்னு முயற்சிப்பேன். அது முடியாமலே போகும். சம்பாதிக்கிற பணம் குடும்பத்துக்குத்தான் சரியா இருக்கும். கவர்மென்ட் வீட்டுக்கு முயற்சி பண்ணேன். அதுக்கும் ஒரு குறிப்பிட்ட பணம் கொடுக்கணும். அதனால, அதையும் கை விட்டுட்டேன். குடிசை வீட்டுல இருக்கிறது தான் நம்ம தலையெழுத்துன்னு நெனச்சிக்கிட்டு அதற்கப்புறம் எந்த முயற்சியும் எடுக்கலை.


நண்பர்கள் கட்டிக்கொடுத்த வீடு
நண்பர்கள் கட்டிக்கொடுத்த வீடு

இந்த நேரத்துல தான் மாப்ள, நாகேந்திரன் வந்துட்டுப் போன அடுத்து 3 நாள்ல சிமென்ட், செங்கல், கம்பின்னு அடுத்தடுத்து பொருட்கள் வீட்டுக்கு முன்னாடி வந்து இறங்குச்சு. எனக்கு பயங்கர ஆச்சர்யம். எல்லாத்தையும் இறக்கிவிட்டு போனப்பிறகு தான் நமக்கு வீடு கட்டிக்கொடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சது. இப்போ, வீட்டைக் கட்டி தீபாவளிப் பரிசாக் கையில் கொடுத்துட்டாங்க. என்னை மட்டுமல்ல, என்னோட குடும்பத்தையே என்னோட பள்ளி நண்பர்கள் வாழவெச்சிருக்காங்க. என் நண்பர்களை என் பிள்ளைகள் ரொம்ப பெருமையா பேசுறாங்க. என்னோட குடும்பத்தை வாழவச்ச என் நண்பர்களை என்னைக்கும் மறக்கமாட்டேன். ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன்" என்றார் உருக்கமாக!

நட்புனா, நண்பன்னா, அன்புனா... இதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு