Published:Updated:

`வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமே முக்கியம்'- அசத்தல் முயற்சியில் பிரான்மலை டீக்கடைக்கார்!

சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் டீக்கடை நடத்தி வருபவர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு மண் குவளையில் டீ, காபி கொடுத்து சுற்றுச்சூழலுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தீங்கு இல்லாமலும், மண்பாண்ட பொருள்களுக்கு உயிர்கொடுத்தும் அசத்தி வருகிறார்.

மண் குவளை டீக்கடை
மண் குவளை டீக்கடை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை திருக்கோயிலுக்கு அருகே இருக்கிறது சாய் ஸ்ரீ ராம் டீக்கடை. இந்தக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு மண் குவளையில்தான் டீ, காபி கிடைக்கிறது. சுத்தமான பசும்பாலில் மட்டும்தான் டீ கொடுக்கிறார். மறந்தும் கூட பாக்கெட் பாலைப் பயன்படுத்துவதில்லை. தனது கடையில் டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களை, மண்குவளையில் டீ குடிக்குமாறு அன்போடு வலியுறுத்துகிறார். தற்போது, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மண் குவளையைத்தான் விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

மண் குவளை டீக்கடை
மண் குவளை டீக்கடை

சண்முகவேலிடம் பேசினோம், ``எனக்குத் திண்டுக்கல் பக்கத்துல நத்தம்தான் சொந்த ஊரு. கோயம்புத்தூரில் ஒரு டீக்கடை, பேக்கரியில் 38 வருஷம் வேலைபார்த்தேன். சொந்தமா ஒரு டீக்கடை நடத்தணும்னு ரொம்ப வருஷ ஆசை. இப்போ, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாலதான் அந்த ஆசை நிறைவேறுச்சு. பிரான்மலை கோயிலுக்குப் பக்கத்துல டீக்கடை ஆரம்பிச்சேன். கடை ஆரம்பிச்சு 2 வருஷம் ஆகுது. வாடிக்கையாளர்கள் நல்ல ஆதரவு கொடுக்கிறாங்க.

நாமலும் சம்பாதிக்கணும். அதே நேரத்தில் நமக்கு ஆதரவு கொடுக்கிற வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரமான பொருளைத்தான் நாம கொடுக்கணும். அதுக்காகத்தான் சுத்தமான பசும்பாலில் மட்டும் டீ கொடுக்கிறேன். இப்போ, கொஞ்ச மாசமாகத்தான் வாடிக்கையாளர்களுக்கு மண் குவளையில் டீ கொடுக்கிறேன். ஆரம்பத்துல, பிளாஸ்டிக், பேப்பர் கப்லதான் பலரும் டீ கேட்பாங்க. அவங்க எல்லாரையும் மண்குவளையில் டீ குடிக்க வைக்க ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன்.

மண் குவளை டீக்கடை
மண் குவளை டீக்கடை

கடையில, பிளாஸ்டிக், பேப்பர் கப் எல்லாம் கிடையாது. பேப்பர் கப்கள்ல உள்ள தீங்கு பற்றி அவங்க தெரிஞ்சுக்கணும்னு அந்த கப்களை வாங்கி, சுடு தண்ணீர் பிடித்துக் காட்டுவேன். கொஞ்ச நேரத்துல பேப்பர் கப்ல ஆயில் மெதக்கும். மெழுகு போட்டு தயாரிக்கிறதால, பேப்பர் கப் நமக்கு தீங்குன்னு சொல்லி புரிய வைப்பேன். மண் குவளையைத்தான் பயன்படுத்தி நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தனர் என்று கூறுவேன்.

அப்படியும் சிலர் மண்குவளை வேண்டாம்னு சொல்லிருவாங்க. அவங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். விரும்பிக் கேட்டால், கண்ணாடி டம்ளர்ல டீ கொடுத்திடுவேன். அப்படியும் வேண்டாம்னா நன்றி வணக்கம் கூறி அனுப்பிடுவேன். அப்படி போறவங்க நம்ம கடைக்குத் திரும்ப வரமாட்டாங்க. ஆனாலும், சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாமலும், வாடிக்கையாளர்களுக்குத் தீங்கு இல்லாமலும் நாம கொடுக்கிறோம்ங்கிற திருப்தி இருக்கும்.

மண் குவளை டீக்கடை
மண் குவளை டீக்கடை

மண்குவளையில் டீ வேண்டாம்னு சொல்றவங்களுக்காக கொஞ்சம் கண்ணாடி டம்ளரும், அலுமினிய டம்ளரும் வெச்சிருக்கேன். இப்போ, 50 மண் குவளைகள் இருக்கு. மண் குவளையை தினமும் சிறிது நேரம் சுடுநீரில் ஊரவைத்து நன்கு கழுவினால் போதும் எந்தக் கிருமிகளும் அண்டாது. ஆனாலும், 20 நாள் வரைக்கும் பயன்படுத்திவிட்டு அதன்பின்பு மாத்திவிடுவேன். கண்ணாடி டம்ளர் 10 ரூபாய்தான். ஒரு மண் குவளை ரூ.22க்கு வாங்குகிறேன்.

ஆனாலும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கிறோம்ங்கிற திருப்தி இருக்கும். இப்போ, டீ போட்டுக் கொடுக்கும் பாத்திரங்கள் எல்லாம் அலுமினியப் பாத்திரங்களாகத்தான் இருக்குது. அனைத்தையும் மண்பாண்ட பானைகளாக மாத்தணும். விரைவில் மாத்திடுவேன். அதோட, வழக்கமான டீ இல்லாம, ஆவாரம்பூ, துளசி, புதினான்னு ஆரோக்கியமான டீக்களைக் கொடுக்கிறேன். ஆவாரம்பூ, துளசி எல்லாம் மலையில இருக்கும்.

மண் குவளை டீக்கடை
மண் குவளை டீக்கடை

ஒரு நாள் ஒதுக்கி எல்லாத்தையும் பறிச்சிக்கிட்டு வந்து உலர்த்தி பொடியாக்கி வெச்சுப் பயன்படுத்துறேன். மண் குவளையில் டீ குடிக்கும் போது அலாதியான சுவை கிடைக்கும். மண் குவளையில் குடிக்கும் போதுதான் அதை உணர முடியும். சின்ன முயற்சிதான் செஞ்சேன். இப்போ, ரொம்ப பேர் ஆதரவு கொடுக்கிறாங்க மகிழ்ச்சியாக இருக்கு. சுற்றுச்சூழலுக்கும் தீங்கு இல்லாம, வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு இல்லாம நாம இந்தக் கடையை நடத்திக்கிட்டு வர்றோம் என்ற ஆத்ம திருப்தி எனக்கு இருக்கு" என்று முடித்தார்.