புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கொசப்பட்டி கிராமத்தில் 18 படிகளுடன் அமைந்திருக்கிறது, தென் சபரி ஐயப்பன் கோயில். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நிகராக தோற்றமும் காட்சியும் அளிக்கக் கூடிய இங்கு, சபரிமலைக்கு நடந்து செல்ல முடியாத நிலையில் இருக்கும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு இருமுடி கட்டி வந்து ஐயப்பனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
தற்போது, கொரோனா காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி கொசப்பட்டிக்கு வந்து ஐயனை வழிபட்டுச் சென்றனர். இந்நிலையில் தான், இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் ஏற்கெனவே இரண்டு முறை நடைபெற்ற நிலையில், மூன்றாவது முறையாகக் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் மகா கணபதி ஹோமம், தன பூஜை சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு நான்கு கால பூஜைகள் முடிவுற்ற நிலையில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைத் தலையில் சுமந்து சென்ற சிவாசார்யர்கள் வேத மந்திரங்கள் ஓத பக்தர்களின் சாமியே சரணம் ஐயப்பா முழக்கங்களோடு கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை கோயிலில் 18 படி பூஜை நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
