Published:Updated:

``சரியா விசாரிக்கல; டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுங்க!" - எஸ்.பிக்கு உத்தரவிட்ட நீதிபதி!

கும்மராஜா (கரூர் நகர டி.எஸ்.பி)
கும்மராஜா (கரூர் நகர டி.எஸ்.பி) ( நா.ராஜமுருகன் )

பாலியல் வழக்கை சரிவர விசாரிக்காத கரூர் நகர டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பிக்கு கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு.

``கரூர் டி.எஸ்.பி பாலியல் வழக்கில் சரியாக செயல்படவில்லை. குற்றவாளிக்குச் சாதகமாக செயல்பட்டுள்ளார். அதனால், இவர்மீது நடவடிக்கை எடுப்பதோடு, இவர் விசாரிக்கும் வழகுகளை நீங்கள் மானிட்டர் செய்யுங்கள்" என்று கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு கலைக் கல்லூரி
அரசு கலைக் கல்லூரி
நா.ராஜமுருகன்

கரூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் மீது கரூர் காவல்நிலையத்தில், கடந்த 7 ஆண்டுகளாக கல்லூரி மாணவிகளை `இன்டர்னல் மார்க்கை குறைத்துவிடுவேன்' என்று சொல்லி மிரட்டி பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவிகள் புகார் கொடுத்தனர். தொடர் போராட்டம் நடத்தினர்.

அவர்கள் கொடுத்த புகாரின் மீது கரூர் நகர காவல்நிலைய குற்ற வழக்கில் அட்டவணை சாதியைச் சேர்ந்த மாணவியும் பாதிக்கப்பட்டிருப்பதால், வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஜாமீன் மனு விசாரணையில் கரூர் மாவட்ட நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், `90 நாள்களுக்குள் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவித்துவிட வேண்டும்' என்ற நடைமுறைப்படி ஜாமீன் கேட்டு பேராசிரியர் இளங்கோவன் கடந்த வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, கரூர் மாவட்டத் தலைமை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர், இந்த வழக்கை புலன் விசாரணை செய்த கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜாவிடம் விளக்கம் கேட்டார்.

கும்மராஜா
கும்மராஜா
நா.ராஜமுருகன்

``90 நாள்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் விட்டது குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் போகட்டும் என்ற எண்ணத்தில்தானா? உங்களை யார் டி.எஸ்.பி வேலைக்கு எடுத்தது. உங்களால் மக்களுக்குதான் கேடு. 90 நாள்கள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், அப்படி என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? எனக்கு விளக்கம் தரணும். தினவாரியாக நீங்கள் என்ன பண்ணிக்கொண்டிருந்தீர்கள்ன்னு அபிடபிட்டை தாக்கல் பண்ணுங்க. திங்கள்கிழமை இந்த வழக்கு வரும்" என்று காய்ச்சித் தள்ளிவிட்டார். இந்தத் தகவலை விகடன் இணையதளம்தான், கடந்த 30-ம் தேதி, `உங்களையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தது? - கரூர் டி.எஸ்.பியை வறுத்தெடுத்த மாவட்ட நீதிபதி' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று (1-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. டி.எஸ்.பி கும்மராஜாவிடம், ``அபிடபிட் என்னாச்சு?" என்று மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் கேட்டார். அதற்கு கும்மராஜா, ``மேற்படி வழக்கு கோப்பில் குற்றப்பத்திரிகை குறித்து அரசு வழக்கறிஞரின் கருத்து கேட்பதற்காக, அவரிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு ஆவணங்கள் ஒருமாதமாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலேயே வைக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் குறுகிய காலத்தில் திருப்பித் தரவில்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது|" என்று ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார். அதைப் பார்த்த அரசு வழக்கறிஞரோ, ``கும்மராஜா பொய் சொல்கிறார். நான், என்னிடம் வந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை நான்கு நாள்களில் பரிசீலித்துவிட்டு, திருப்பி அனுப்பிவிட்டேன். ஆனால், `என்னிடத்தில் ஒரு மாதமாக மேற்படி வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது' என்று காவல் துணை கண்காணிப்பாளர் சொல்வது பொய்" என்று உறுதியாக தெரிவித்தார்.

`காஸ்ட்லி' தண்ணீர் முதல் மூலவர் காவல் வரை... அத்திவரதர் தரிசனம் செல்பவர்கள் கவனத்துக்கு!
அரசு கலைக் கல்லூரி
அரசு கலைக் கல்லூரி
நா.ராஜமுருகன்

அதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி, "இருவரில் யார் சொல்வது உண்மை?. உண்மையில் யாரால் இந்த காலதாமதம் ஏற்பட்டது என்று தகுந்த வகையில் ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு இருவரும் அமைதியாக இருந்தனர். பிறகு, இந்த ஜாமீன் மனு உத்தரவில் மாவட்ட தலைமை நீதிபதி, பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் இளங்கோவனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். "மறுஉத்தரவு வரும்வரையில் சிதம்பரத்தில் தங்கி கையெழுத்து போட வேண்டும்" என்று உத்தரவிட்டார். அதோடு, "இந்த வழக்கு விசாரணையை சரிவர கையாளாத கரூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜா மீது தக்க நடவடிக்கையை கரூர் எஸ்.பி எடுக்க வேண்டும். அதோடு, கும்மராஜா விசாரிக்கும் மத்த வழக்குகளையும், சரியாக விசாரிக்கிறாரா என்று மானிட்டர் செய்ய வேண்டும்" என்றும் உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு