Published:Updated:

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவி; பாராட்டிய ஐ.நா!

``இத்திட்டம் குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு விரிவாக அறிக்கை அனுப்பியிருந்தேன். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லை. ஐ. நா சபையிடமிருந்து பாராட்டுக் கடிதம் கிடைத்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.''

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்விராயன்விடுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணவி கௌரி. தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்புப் படிக்கிறார். சிறுவயதிலேயே சமூக அக்கறைகொண்ட கௌரி, ஒரு கிராமத்தின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து 8-ம் வகுப்புப் படிக்கும் போதே ஆய்வு செய்து `தேசிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்' ஒன்றை உருவாக்கினார். இதில், ஒவ்வொரு கிராமத்துக்கும் உரிய பாரம்பர்யம், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

ஐ நா  சபை அனுப்பிய கடிதம்
ஐ நா சபை அனுப்பிய கடிதம்
``கிராமம்தோறும் `கிராம கலெக்டர்' இருக்கணும்!" -  அரசுக்கு பரிந்துரைத்த மாணவி; பாராட்டிய நீதிபதிகள்!

கிராமங்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் கௌரியின் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே அமல்படுத்தக்கோரி கெளரியின் தந்தை லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்தைத் தயாரித்த கௌரியை வெகுவாகப் பாராட்டியதுடன், இதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தனர். இதற்கிடையேதான், கெளரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.நா சபை பொதுச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில், உலகுக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பில் பின் தங்கி, வளர்ச்சி அடையாமல் உள்ள நாடுகளுக்கு, வளரும் நாடுகள் உதவி செய்வது குறித்தும், உலக அளவில் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் அவர் விரிவாக எழுதியிருந்தார். கெளரியின் கடிதம் குறித்து ஐ. நா சபை செயலகத்திலிருந்து அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், `உலக அளவில் பொதுச் சுகாதாரம் பேணுவதில் ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது. ஆக்கபூர்வமான கருத்துகளைக் கவனத்துக்குக் கொண்டு வந்த உங்களின் கடிதத்தால் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும்' என்றும் பதிலளித்து மாணவியை நெகிழ வைத்திருக்கின்றனர் ஐ.நா அதிகாரிகள்.

கௌரி எழுதிய கடிதம்
கௌரி எழுதிய கடிதம்
10-ம் பள்ளி மாணவி தயாரித்த கிராமப்புற மேம்பாடு திட்டம்; பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

இதுபற்றி மாணவி கெளரியிடம் பேசினோம். ``தேசிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு விரிவாக அறிக்கை அனுப்பியிருந்தேன். ஆனால், யாருமே கண்டுகொள்ள வில்லை. பதில் கடிதம் கூட கிடைக்கவில்லை. அதன் பின்புதான் நீதிமன்றத்தையே நாடினோம். கொரோனா தடுப்பு முறைக்குச் சுகாதாரக் கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்து கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள அம்சங்களைக் குறிப்பிட்டு ஐ. நா சபைக்குக் கடிதம் அனுப்பியிருந்தேன். அவர்களிடமிருந்து பதில் கடிதம் பாசிட்டிவ்வாக கிடைத்திருப்பது மனதுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு