Published:Updated:

`வைராக்கியம் தந்தது விகடன் உதவி!’ - நிறைவேறுகிறது கிராமத்து மாணவியின் மருத்துவர் கனவு

கயல்விழி

அப்பா, அம்மாவுக்குப் பிறகு தம்பி, தாத்தா, பாட்டி என மூவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, கயல்விழிக்கு வந்தது. குடும்ப வறுமையால், மருத்துவர் கனவை சுமந்துகொண்டு கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அக்காவின் சுமையைக் குறைக்க தம்பியும் பெயின்டர் வேலைக்குச் சென்று வந்தார்.

`வைராக்கியம் தந்தது விகடன் உதவி!’ - நிறைவேறுகிறது கிராமத்து மாணவியின் மருத்துவர் கனவு

அப்பா, அம்மாவுக்குப் பிறகு தம்பி, தாத்தா, பாட்டி என மூவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, கயல்விழிக்கு வந்தது. குடும்ப வறுமையால், மருத்துவர் கனவை சுமந்துகொண்டு கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அக்காவின் சுமையைக் குறைக்க தம்பியும் பெயின்டர் வேலைக்குச் சென்று வந்தார்.

Published:Updated:
கயல்விழி

இந்த உலகம் சுழல்வது, நம்பிக்கை என்ற அச்சால். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கயல்விழி. விதி புரட்டிப்போட்ட வாழ்க்கையில், அடுத்த நாளுக்கான உத்தரவாதமே இல்லாமல் இருந்தவருக்கு, விகடன் உட்பட பல நல்ல உள்ளங்களும் உதவிக்கரம் நீட்டி தெம்பூட்டினார்கள். அதைப் பற்றிக்கொண்டு நம்பிக்கையுடன் மேலே எழுந்து வந்த அந்தச் சிறுமி, இப்போது வெள்ளை கோட் மாட்டவிருக்கிறார்!

புதுக்கோட்டை அருகே வலங்கொண்டான் விடுதியைச் சேர்ந்தவர் கயல்விழி. நன்றாகப் படிக்கும் மாணவி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்திருந்தார். மருத்துவராகும் கனவோடு படித்துக்கொண்டிருந்த கயல்விழிக்கு, 2020-ம் ஆண்டு பல இடிகளை இறக்கியது.

கயல்விழியின் அப்பா, இருதய நோய் பாதிப்பால் திடீரென இறந்து போக, அடுத்த சில மாதங்களில் அவரின் தாயும் காலமானார். கயல்விழியும், அவர் தம்பி கலைவாணனும் பரிதவித்து நின்றனர். தாத்தா, பாட்டியின் பாதுகாப்பு கிடைத்தாலும், வருமானம் இல்லை. சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலை.

தாத்தா பாட்டியுடன்
தாத்தா பாட்டியுடன்

அப்பா, அம்மாவுக்குப் பிறகு தம்பி, தாத்தா, பாட்டி என மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கயல்விழிக்கு வந்தது. குடும்ப வறுமையால், மருத்துவர் கனவை சுமந்துகொண்டு கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அக்காவின் சுமையைக் குறைக்க தம்பியும் பெயின்டர் வேலைக்குச் சென்று வந்தார். பள்ளிப் புத்தகங்களைச் சுமக்க வேண்டிய வயதில் இருவரும் குடும்ப பாரத்தை சுமந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். அவர்களின் நிலை குறித்து அறிந்த நாம்,  ``நான் டாக்டராகணும், தம்பி கலெக்டராகணும்!’ - வறுமையிலும் போராடும் கயல்விழி - என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

நம் கட்டுரையைப் படித்து நெகிழ்ந்துபோன வாசகர்கள் பலரும், கயல்விழிக்கு உதவ முன்வந்தனர்; தங்களால் இயன்ற பணத்தை கயல்விழியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தனர். நம் வாசகர்கள் மூலம் கயல்விழிக்கு ரூ.3.92 லட்சம் பண உதவி கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு கயல்விழியின் தேவைகள் அனைத்தையும் உடனிருந்து பூர்த்தி செய்து கொடுத்தோம்.

கயல்விழி ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ள ஆண்ட்ராய்டு மொபைல், அரிசி, மளிகைப் பொருள்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்டவற்றுடன், கலைவாணன் படிப்புக்குத் தேவையான உதவிகளையும் பூர்த்தி செய்தோம். தொடர்ந்து, ரூ.3 லட்சம் பணத்தை கயல்விழியின் உயர் கல்விக்கு பயன்படும் வகையில் அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் பணமாகச் செலுத்தினோம்.

அடுத்தடுத்த உதவிகளால் நெகிழ்ந்துபோன கயல்விழி, ``எனக்கு உதவி செஞ்ச எல்லாரும் பெருமைப்படுற வகையில, நான் டாக்டராகணும். அந்த சிந்தனை மட்டும்தான் என் மனசுல ஓடிக்கிட்டு இருக்கு. நிச்சயம் நடத்திக் காட்டுவேன்’’ என்று தெரிவித்திருந்தார். அவர் வெற்றி பெற நாமும் காத்திருந்தோம். இரண்டு வருடங்கள் ஓடிய நிலையில், தான் சொன்னதைப் போலவே இன்று கயல்விழி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

10-ம் வகுப்பைப் போன்று ப்ளஸ் 2 தேர்விலும் பள்ளியில் முதலிடம் பிடித்த கயல்விழியை, கிராமமே கொண்டாடியது. நாம் பாராட்டுகளுடன், மருத்துவராகும் கனவுடன் இருந்த கயல்விழிக்கு நீட் தேர்வுக்கான புத்தகங்களை  வாங்கிக் கொடுத்தோம். நீட் பயிற்சிக்கும் வழிகாட்டினோம். முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், இரண்டாவது முயற்சியில் இப்போது சாதித்துக் காட்டியிருக்கிறார். 

நேரில் பாராட்டிய எம்.எல்.ஏ
நேரில் பாராட்டிய எம்.எல்.ஏ

நீட் தேர்வில் 262 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற கயல்விழிக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்புக்கு இடம் கிடைத்திருக்கிறது. பெற்றோரை இழந்து, எத்தனையோ துயரங்களையும் தடைகளையும் தாண்டி மருத்துவர் கனவை இன்று நனவாக்கியிருக்கிறார் கிராமத்து மாணவி கயல்விழி. உற்சாகத்தில் இருந்தவரிடம் பேசினோம்.

``அம்மா, அப்பா ரெண்டு பேரும் இறந்ததுக்கு அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டோம். சாப்பாட்டுக்கே கஷ்டம். உறவுகள்கிட்ட இருந்து உதவிகள் எதுவும் கிடைக்கலை. நாம எப்படித்தான் வாழப்போறோம்ங்கிற பயம் வந்துடுச்சு. அந்த நேரத்துல, விகடன் எங்களோட நிலைமை பத்தி எழுதினதால, அந்த இக்கட்டான கொரோனா காலத்துல நாங்க நினைச்சுப் பார்க்காத பல உதவிகள் கிடைச்சது.  நாங்க மீண்டு வர வழியும் கிடைச்சது. கிடைச்ச உதவிகளை வச்சி என்னோட, குடும்பத்தோட தேவைகள் எல்லாத்தையும் பூர்த்தி செஞ்சிக்கிட்டேன். தாத்தா, பாட்டி மட்டும்தான் நமக்கு உறவுன்னு நெனச்சுக்கிட்டு இருந்த நேரத்துல, முகம் தெரியாத அக்கா, அண்ணன், அப்பா, அம்மாவா பலரும் தோள் கொடுத்து, நாங்க எல்லாரும் இருக்கோம்னு உதவிகள்

மூலமா உணர்த்தினாங்க. அதற்கப்புறம்தான், தன்னம்பிக்கையும் உற்சாகமும், கூடவே வைராக்கியமும் வந்துச்சு. எப்படியாவது படிச்சு டாக்டராகிடணும்னு எனக்கு நானே உத்வேகம் கொடுத்துக்கிட்டேன்.

ப்ளஸ் டூ படிச்சு முடிச்ச உடனே, நீட் தேர்வு எழுதுனேன். அப்போ, பயிற்சி மையத்துக்கு எல்லாம் போகலை. புத்தகங்களை வச்சு வீட்டிலேயே படிச்சுதான் தேர்வு எழுதுனேன். சிரமமாதான் இருந்துச்சு. முதல் முயற்சி தோல்வியில முடிஞ்சது. அந்த நேரத்துல ஊர்க்காரங்க சிலர், `அவனவன் காசைக் கொட்டி கோச்சிங் சென்டர் போய் படிச்சே பாஸ் ஆக முடியல, உன்னால இதெல்லாம் முடியுமா...’னு சொன்னப்போவும், என்னால கண்டிப்பா முடியும்னு நம்பினேன். ஒரு மூணு மாசம் மட்டும் திருச்சியில ஒரு தனியார் பயிற்சி மையத்துல பயிற்சி எடுத்தேன். அப்புறம் வீட்டிலேயே நீட் தேர்வுக்கான புத்தகங்களை வெச்சு படிக்க ஆரம்பிச்சேன். கடின உழைப்பை போட்டேன். அடுத்த முறை நீட் தேர்வு எழுதினப்போ, கனவு நனவாகிருச்சு.

நன்கொடை வழங்கியவர்கள்
நன்கொடை வழங்கியவர்கள்

நம்ம அடிப்படை தேவைகள் பூர்த்தி ஆனாதான், கனவை எல்லாம் யோசிக்க முடியும். அந்த வகையில, நாங்க கஷ்டப்பட்டப்போ எங்களுக்குக் கிடைச்ச உதவிகள் எல்லாம்தான், கனவெல்லாம் காணுற அளவுக்கு எனக்கு தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்துச்சு. அப்புறம் படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். இப்போ மெடிக்கல் சீட் கிடைச்சிருச்சு. அப்போ எனக்கு உதவியா கிடைச்ச தொகையைக் கொண்டு, ஹாஸ்டல், புக்ஸ்னு இப்போதைக்கு ரெண்டு வருஷம் சமாளிச்சிடுவேன்னு நினைக்கிறேன். டாக்டராகி என்னால முடிஞ்ச உதவிகளை கிராம மக்களுக்கு செய்யணும். முக்கியமா, என்னை மாதிரி கிராமத்து மாணவிகள் நீட் தேர்வை எழுத வழிகாட்டணும்’’ என்றவர்.

’’விகடன் மூலமா எனக்குக் கிடைச்ச உதவிகளையும், முகம் தெரியாத உறவுகளையும் எப்பவும் மறக்க மாட்டேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

நல்ல கனவுகள் நனவாக உடன் நிற்போம் எப்பொழுதும்!