அஸ்ஸாம் மாநிலத்தில் சமீபத்தில் 14 வயதுக்குக் குறைவான சிறுமிகளை திருமணம் செய்பவர்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி 14 வயதுக்குக் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆண் கைது செய்யப்படுவார். அதேபோல, 14-18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது குழந்தை திருமண தடை சட்டம், 2006-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

அமைச்சரவையின் இந்த முடிவை தொடர்ந்து கடந்த சில நாள்களாக மாநில அரசு சிறார் திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தொடங்கிய இந்த நடவடிக்கை சட்டமன்ற தேர்தல் வரை தொடரும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
இது வரை சிறார் திருமணத்தில் ஈடுபட்டதாக 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதோடு 2500க்கும் அதிகமானோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என எதிர் தரப்பினர் தெரிவிக்கின்றனர். பிஸ்வநாத் மாவட்டத்தில் மட்டும் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு துப்ரி மாவட்டத்தில் 375 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ள அச்சம் காரணமாக மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போலீஸாரின் இந்நடவடிக்கைக்கு எதிராக பாரக் பள்ளத்தாக்கில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி கூறுகையில், ’சிறார் திருமண பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால், அரசு மாநிலத்தில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

ஆனால் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்த மதரஸாக்களை மூடுகிறீர்கள். ஆண்களை கைது செய்துவிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பெண்களை யார் கவனித்துக்கொள்வது?’ என்று கேள்வி எழுப்பினார்.
அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் பூபன் போரா இது குறித்து அளித்த பேட்டியில், `இவ்விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். நாங்கள் சிறார் திருமணத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்துவதால் என்ன பயன் இருக்கிறது? இது விளம்பரத்திற்காக செய்யப்படுகிறது என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை’ என்று தெரிவித்தார்.