Published:Updated:

`வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள்

நாங்குநேரி காவல்நிலையம்
நாங்குநேரி காவல்நிலையம்

நாங்குநேரி டோல்கேட்டில் பயணிகளின் வாகனங்கள் தேவையில்லாமல் காத்திருக்க வைக்கப்பட்டன. உரிய கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு வாகனங்களை அனுப்பாமல் காத்திருக்க வைப்பது ஏன் எனக் கேட்ட பயணிகள் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். 

தமிழகம் முழுவதும் உள்ள டோல்கேட்டுகளில் ஃபாஸ்ட் டேக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பணம் செலுத்தும் கவுன்டர் ஒன்று மட்டுமே இருப்பதால் அந்த வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது அனைத்து டோல்கேட்டுகளிலும் பெரும் பிரச்னையாகி வருகிறது. 

காவல்நிலையம் முன்பாகப் பாதிக்கப்பட்டவர்கள்
காவல்நிலையம் முன்பாகப் பாதிக்கப்பட்டவர்கள்

நீண்டநேரமாக வாகனங்கள் காத்திருக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே மோதல் மற்றும் வாக்குவாதம் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள டோல்கேட்டில் அடிக்கடி தகராறு, அடிதடி போன்ற பிரச்னைகள் நடக்கின்றன. கடந்த ஆண்டு இந்த டோல்கேட் வழியாகச் சென்ற ஒரு தம்பதியை வழிமறித்த டோல்கேட் ஊழியர்கள், அந்த நபரை அடித்து விரட்டிவிட்டு பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டனர். 

துப்பாக்கி முனையில் பாலபாரதிக்கு மிரட்டலா?!- கரூர் சுங்கச்சாவடி சர்ச்சை

இந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் நடக்கும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மணவாளக்குறிச்சி மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களிலிருந்து இரு கார்களில் குடும்பத்தோடு சிலர் பயணம் செய்தார்கள். அவர்கள் வந்த வாகனங்கள் நாங்குநேரி டோல்கேட் வந்தபோது பணம் கட்டும் இடத்தில் காரணமின்றித் தாமதமாகியுள்ளது.

காரிலிருந்து இறங்கிய ஷேக் சுலைமான், சர்புதீர் ஆகியோர், `பணத்தை வேகமாக வாங்கி ரசீது கொடுத்து வாகனங்களை அனுப்புங்கள்’ எனக் கூறியிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த பணியாளர் அவதூறாகவும் கேலியாகவும் பதிலளித்திருக்கிறார். அப்போது அவரிடம், `என் வயதுக்கு மரியாதை குடுத்துப் பேசு தம்பி’ எனச் சொல்லியுள்ளார். 

சர்புதீன் என்பவர் கையில் காயம்
சர்புதீன் என்பவர் கையில் காயம்

மீண்டும் அவதூறாகப் பேசிய அந்த ஊழியர், அங்கு கிடந்த இரும்பு சேரை தூக்கி அடித்துள்ளார். அப்போது அங்கு வந்த மேலும் இரு ஊழியர்களும் சேர்ந்து கம்பு, கட்டை ஆகியவற்றால் தாக்கியிருக்கிறார்கள். இதில், ஷேக் சுலைமான் என்பவரின் கண் இமையில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. அவரது மூக்கில் அடி விழுந்ததால் ரத்தம் கொட்டியுள்ளது. அதைத் தடுத்த சர்புதீன் என்பவரின் கை மற்றும் தொடைப் பகுதியில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கினார்கள்.

கொலை வெறியுடன் தாக்குதல் நடந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள், காரிலிருந்து இறங்கி வந்து தாக்குதலைத் தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. பெண்களைக் கீழே தள்ளி விட்டதுடன் குழந்தைகளையும் அடித்து விரட்டியிருக்கிறார்கள். அதைக் கண்ட சக வாகன ஓட்டிகளும் பயணிகளும் சேர்ந்து அங்கிருந்த டோல்கேட் பணியாளர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

இருவர் பிடிபட்ட நிலையில் ஒருவர் ஓடிவிட்டதால் அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் நாங்குநேரி எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் சட்டரீதியான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு