Published:Updated:

சென்னை ஐ.ஐ.டி.யில் பத்திரிகை புகைப்படக்காரர் மீது தாக்குதலுக்கு கண்டனம்!

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் பத்திரிகை புகைப்படக்காரர் மீது நடத்தப்பட்ட  தாக்குதலுக்கு சென்னை நிருபர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.டெக். பயின்று வந்த மெருகு மானஷா (22) என்ற  மாணவி,விடுதியில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான செய்திக்கு புகைப்படம் எடுப்பதற்காக'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில  நாளேட்டின் புகைப்படக்காரர்,ஆல்பின் மாத்யூ என்பவர் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்கு  நேற்று சென்றார்.

அங்கு அவர் இச்சம்பவம் தொடர்பாக பேசிய மாணவர்களையும், சம்பவம் நிகழ்ந்த  கட்டிடத்தையும் புகைப்படம் எடுக்க முயன்றார்.அப்போது அங்கு வந்த ஐ.ஐ.டி.யின்  பேராசிரியர் ஒருவர், மாத்யூவை புகைப்படம் எடுக்கக்கூடாது என ஆட்சேபம்  தெரிவித்து,கோபத்துடன் திட்டியுள்ளார்.

மேலும் அவரிடமிருந்து கேமராவை பறிக்க அந்த பேராசிரியர் பறிக்க முயன்றார்.அதனை  மாத்யூ தடுத்தபோது, செக்யூரிட்டியை அழைத்து அவருடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.

இதில் உதட்டில் ரத்தக் காயமடைந்த மாத்யூவை அவர்கள் இருவரும்,அங்குள்ள நிர்வாக  கட்டிடத்தில் உள்ளே தள்ளி அடைத்து வைத்தனர்.

##~~##
அவரை மீட்க அந்த நாளேட்டின் நிருபர் உள்ளே செல்ல முயன்றபோது அவரையும்  உள்ளே விட மறுத்துவிட்டனர்.
பின்னர் இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத்  தொடர்ந்து,போலீசார் விரைந்து வந்து புகைப்படக்காரரை மீட்டனர். 
இந்நிலையில்,இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை நிருபர்கள்  சங்கம்,இது தொடர்பாக  ஐ.ஐ.டி. நிர்வாகம் ஊடகங்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர  வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.