Published:Updated:

'2ஜி ஊழலை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம்'

'2ஜி ஊழலை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம்'

புதுடெல்லி, பிப்.10,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை தெரிவித்துள்ளது. ##~~##

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் இன்று தற்போதைய விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு சிபிஐ இன்று சமர்ப்பித்தது.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டது, 2ஜி ஸ்பெக்ட்ரம்  ஒதுக்கீடுகளால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, எந்தெந்த நிறுவனங்கள் பயனடைந்துள்ளன என்பன உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் விசாரித்து முடிப்பதற்கு வசதியாக சிறப்பு நீதிமன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், இதற்கு இணையாக வேறு எந்த வழக்கும் இல்லை என்பதால் அதிகபட்ச முன்னுரிமையை மத்திய அரசு அளிக்க வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், சிறப்பு நீதிமன்றம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குற்றப்பத்திரிகை...

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு, மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தது. 
 

அடுத்த கட்டுரைக்கு