Published:Updated:

' பணமதிப்பு நீக்கத்தால் 31 ஆயிரம் கோடி நஷ்டம்!'- வரிந்து கட்டும் வங்கி ஊழியர் சங்கம்

' பணமதிப்பு நீக்கத்தால் 31 ஆயிரம் கோடி நஷ்டம்!'- வரிந்து கட்டும் வங்கி ஊழியர் சங்கம்
' பணமதிப்பு நீக்கத்தால் 31 ஆயிரம் கோடி நஷ்டம்!'- வரிந்து கட்டும் வங்கி ஊழியர் சங்கம்

' பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது ஒரு லட்சத்து 9 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் தலா 80 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து இந்த அரசு ஆராயாமல் இருப்பது ஏன்?’ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. `பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்பதுதான் பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு. அதன் பின்னர் ``ஏழை மக்களையும் தேசத்தையும் ஏமாற்றிக் கொள்ளையடித்துப் பணம் சேர்த்தவர்கள், இப்போது நிம்மதியாகத் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கணக்கில் காட்டப்படாமல் இருந்த மூன்று லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த 18 லட்சம் பேர், அரசின் கண்காணிப்பின்கீழ் வந்துவிட்டனர். 1.25 லட்சம் கோடி அளவிலான கறுப்புப் பணம் பிடிபட்டுள்ளது. கறுப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை தொடரும்" என, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி விளக்க முழக்கமிட்டார். 

நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ' புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15,44,000 கோடி ரூபாய். இதில் 15,28,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளது’ என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆனால், அன்றிலிருந்து இன்று வரை இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசும் மக்களும் பயனடையவே இல்லை என்பதே தற்போதைய குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. 

இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின்(தமிழகம்) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம். " பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரிசர்வ் வங்கிக்கு வராத தொகை ரூ.16,000 கோடி ஆகும். ஆனால், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடச் செலவிடப்பட்ட தொகையோ ரூ.31 ஆயிரம் கோடி. இதில், 99 சதவிகித ரூபாய் நோட்டுகள் சட்டரீதியாகவே மாற்றப்பட்டு விட்டன. அப்படியானால், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசும் மக்களும் பயனடையவே இல்லை" என்றவர், “பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரிசர்வ் வங்கிக்கு லாபம் இல்லை. 31 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஆனது என்பதுதான் உண்மை. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டரை லட்சம் கோடி நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டி விடுவதாகக் கூறிய அரசு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது ஒரு லட்சத்து 9 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் தலா 80 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து ஆராயாமலும் டெபாசிட் பணம் குறித்து கேள்வி எழுப்பாமலும் இருப்பது ஏன்? கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்பது மத்திய அரசின் தோல்விதான்” என்கிறார் நிதானமாக.