Published:Updated:

’மோசமான நிதிக்கொள்கை மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது’: மன்மோகன் சிங் காட்டம்

’மோசமான நிதிக்கொள்கை மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது’: மன்மோகன் சிங் காட்டம்
’மோசமான நிதிக்கொள்கை மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது’: மன்மோகன் சிங் காட்டம்

’பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்னும் மோசமான நிதிக்கொள்கை மக்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது’ என முன்னாள் பிரதமரும் நிதி அமைச்சருமான மன்மோகன் சிங் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி. அந்த நாளை கறுப்பு நாளாக அறிவித்திருக்கின்றன காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட 18 கட்சிகள். அன்றைய தினம் நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் அன்றைய தினம், ‘மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில், அந்த நாளை கறுப்புப் பண எதிர்ப்பு நாளாக அனுசரிக்க முடிவெடுத்துள்ளது பா.ஜ.க.

இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வரும் 8-ம் தேதியுடன் ஒரு ஆண்டு பூர்த்தியாக உள்ளது. பண மதிப்பிழப்பால் நாடே அவஸ்தைக்குள்ளாகியது. இதனால், விவசாயிகள், வணிகர்கள், ஏழை எளிய மக்கள் எனப் பலரும் பலவகையிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் எனப் பலதரப்புக் குற்றச்சாட்டுகள், இந்த ஒரு ஆண்டு முழுவதும் எதிரொலித்துவந்தது. இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “பணமில்லா வர்த்தகம் என்னும் நடவடிக்கை பெரும் தோல்வி அடைந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது, ஒரு நாட்டைக் கொள்ளையடிக்கும் செயல். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி ஆகியவை நாட்டின் சிறுதொழில்களை முற்றிலும் அழித்துவிட்டது” என்று குற்றம் சுமத்தினார்.