Published:Updated:

“வெட்கப்படுகிறேன்!” - ஒர் ஆணின் கடிதம் #SpeakUp #IWillChange #உடைத்துப்பேசுவோம்

“வெட்கப்படுகிறேன்!” - ஒர் ஆணின் கடிதம் #SpeakUp #IWillChange #உடைத்துப்பேசுவோம்
“வெட்கப்படுகிறேன்!” - ஒர் ஆணின் கடிதம் #SpeakUp #IWillChange #உடைத்துப்பேசுவோம்

“வெட்கப்படுகிறேன்!” - ஒர் ஆணின் கடிதம் #SpeakUp #IWillChange #உடைத்துப்பேசுவோம்

ஐந்தில் நான்கு இந்தியப் பெண்கள்(79%), பொது இடங்களில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்கிறது சென்ற வருட ஆய்வு ஒன்று. 70% இந்தியப் பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பற்றி புகார் அளிப்பதில்லை என்கிறது, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று. 2007-ல் இந்திய அரசு ஐ.நாவுடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில், 53% குழந்தைகள் sexual abuse victim-களாக இருந்தது தெரியவந்தது. எனில், இந்த எண்கள் எல்லாம் யாரோ அல்ல, நாம்தான். இப்படி திக்கெங்கும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டாலும், அவற்றைப் பேசாமல் மறைத்த, பேசத் தயங்கிய பெண்களின் தலைமுறைகள் முடியட்டும். 'பேசி என்ன ஆகப்போகிறது?' என்கிறீர்களா? இதுவரை குற்றவாளிகளுக்கு அரணாக இருந்துவந்ததே அந்த எண்ணம்தானே? முதலில் அதைத் தகர்ப்போம். அதற்காகவே இந்தத் தளம். அதற்கு மட்டும்தானா? இல்லை. மனநல கவுன்சலிங் முதல் சட்டரீதியான நடவடிக்கைகள்வரை தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும். தன்னால் சக மனுஷிக்கு நேர்ந்த பாலியல் சீண்டலுக்கு வருந்தித் திருந்தும் ஆண்களின் மனமாற்றங்களையும் வரவேற்கிறோம்.

பாலியல் குற்றங்களைப் பொசுக்கும் இந்த சிறு பொறியை பெரும் அக்னி பிரளயமாக மாற்றும் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். #SpeakUp என உடைத்துப் பேசுங்கள்!

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர், ஹார்வி வின்ஸ்டன். சமீபத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், அவர்மீது பாலியல் குற்றம்சாட்டினர். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த, சமூக வலைதளங்களில் #MeToo என்ற பிரசாரம் தீவிரமானது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஓர் ஆணாக இந்த விஷயத்தில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னை வெட்கப்படவைப்பது பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வன்முறைகளின் எண்ணிக்கை மட்டுமல்ல; இந்தப் பிரச்னையில் பெரும்பாலான ஆண்களின் மௌனம்தான். 

ஒரு மாதமாக உலகின் பாதியானவர்கள் தங்கள் உரிமைக்காகக் கத்திக்கொண்டிருந்தபோது, மறுபாதி வர்க்கம் அமைதியையே பதிலாகத் தந்துள்ளது. எப்படி மற்ற விஷயங்களில் குற்றம் நடக்கும்போது, நமக்கெதுக்கு வம்பு என்று வாயை மூடியிருந்தோமோ அப்படியே இப்போதும் இருந்தோம். இன்னும் எத்தனை காலத்துக்குத் போகிறபோக்கில் காதில் வாங்கிக்கொண்டு நகரப்போகிறோம் எனத் தெரியவில்லை. எப்போதுதான் நம்மில் பாதியான அவர்கள் சொல்பவற்றை காது கொடுத்துக் கேட்கப்போகிறோம்? 

நானும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஒரு துரும்பாகவே வளர்ந்தேன். பல பெண்களையும் துரத்தித் துரத்தி காதலித்தேன். அதுவே காதல் என்று எனக்குச் சொல்லப்பட்டது. துரத்திக் காதலித்தால் பெண்கள் விரும்புவார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அதை உண்மை என்று நம்பினேன். நண்பனாக நினைத்தப் பெண்ணையே மீண்டும் மீண்டும் துரத்தினேன். என் நெருங்கிய தோழி ஒருத்தியிடமிருந்து ‘அது நரக வேதனை. நானும் அந்த நரகத்தை அனுபவிச்சிருக்கேன்' என்ற வார்த்தையைக் கேட்ட நாளில் அதை நிறுத்திவிட்டேன். ஆனாலும், இன்னும் முழுமையாக என் ‘ஆம்பள’ தன்மையை விடமுடியவில்லை. ஜீன்களில் கலந்துவிட்ட விஷயமாயிற்றே... ஒவ்வொரு நாளும் முயன்றுவருகிறேன். 

கலாசாரம், மொழி, இந்த நகரம் என மொத்தமாக ஆண்களால் முடிவுசெய்யப்பட்டதாகச் சமூகத்தின் உற்பத்தியான நானும் அப்படித்தானே இருக்க முடியும்? ஓர் உரையாடலே இங்கே கிடையாதே. அதற்கான ஒரு வெளியும் வழங்கப்படவில்லை. அப்படி உருவாக்க என்றுமே உருப்படியாக வேலை பார்த்ததில்லை. இப்போதும், 'ஏன் இவ்வளவு நாளுக்குப் பிறகு இந்தப் பொண்ணுங்க பேசுறாங்க?' என்ற கேள்விதான் வருகிறது. பெண்களுக்காகப் பேசுபவர்களைப் பார்த்து ஓர் ஆள் 'நீங்க எல்லாம் ஆம்பள இல்லையா?' என்று பதிவுசெய்திருக்கிறார். பாலியல் வன்முறையிலும் சீண்டலிலும் என்ன ஆண்மை அமைந்திருக்கிறது? 

பெண்களுடைய விடுதலைப் பெண்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆண்களைப் பூனைகள் என்றும், பூனைகளால் எலிகளுக்கு என்றும் நியாயம் கிடைக்காது என்றும் பெரியார் சொல்லியிருக்கிறார். தள்ளாத வயதிலும் அவர் பெண் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடினாரே, நாமும் நம் பங்குக்கு ஏதாவது செய்யவேண்டாமா? பெண்களைப் புரிந்துகொள்வதோ, அவர்களது பிரச்னைகளைப் புரிந்துகொள்வதோ இயற்பியல், விண்வெளியியல் போன்ற பாடம் கிடையாது. அது, மிகவும் இயல்பானது. ஒருவருடைய நிலையிலிருந்து பிரச்னையை அணுகும் அடிப்படை மனிதக் குணம்.

ஒரு தந்தையாக இதைச் சொல்ல விரும்பவில்லை. எத்தனை காலத்துக்குத்தான் ‘நமக்கென்று’ வரும்போது மட்டும் வாய் திறப்பது? ஒருவேளை எனக்கு ஒரு மகள் இல்லாமல் மகன் மட்டும் இருந்திருந்தால்? இது, 

பெண்களின் பிரச்னை கிடையாது. இந்தச் சமூகத்தின் பிரச்னை. எனவே, எனக்குச் சம்பந்தமில்லை என்று நாம் விலக முடியாது. ஆண்களும் பாலியல் சீண்டல்கள், வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். எனவே, பாலியல் வன்முறை, மனித இனத்துக்கு எதிரான குற்றம். இது மாற வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழ. எத்தனையோ முறைப் பெண்கள் குரல் கொடுத்துவிட்டார்கள். குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்? நாமும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். 

இதற்கு நிறையப் படிநிலைகள் இருக்கின்றன. ஒரு தந்தையில் தொடங்கி, ஒவ்வொரு ஆணாலும் இதைச் செய்யமுடியும். தன் மகளிடம், மனைவியிடம், சக ஊழியரிடம் அவர்கள் பேசுவதைக் காதை திறந்து கேட்க வேண்டும். அவர்களோடு ஆரோக்கியமான உரையாடலைச் செய்வதன்மூலம், அவர்களுடைய உடலைப் பற்றிய கமெண்டுகளைத் தவிர்ப்பதன்மூலம் இதைத் தொடங்கலாம். பெண்ணைப் பின்தொடர்வதைத் தவிர்ப்பதன்மூலம் இதைத் தொடங்கலாம். உங்களைச் சுற்றி இருப்பவர் தவறு செய்யும்போது கேள்வி கேட்பதன்மூலம் இதை மாற்றலாம். 

உங்கள் குழுவில் இருக்கும் ‘பாலியல் சிறுபான்மையினரை’ மிகவும் பாதுகாப்பாக உணரவையுங்கள். இது பயிற்சியில் மட்டும் வந்துவிடப்போவதில்லை. இவை எல்லாம் தொடங்கி, உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதன்மூலம், பெண்களுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து செயல்படுத்தலாம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், திருநர்களாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றே. அவர்களின் திறமையை, செயல்பாடுகளைக்கூட விடுங்கள்... அவர்களுக்கும் இதயம் உண்டு, உணர்வுகள் உண்டு... அது மதிக்கப்பட வேண்டும். அதுதான் மனிதம்.

வாருங்கள் தொடர்ந்து பேசுவோம்... உடைத்துப் பேசுவோம்...

அடுத்த கட்டுரைக்கு