Published:Updated:

மின்பற்றாக்குறை:மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

மின்பற்றாக்குறை:மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
மின்பற்றாக்குறை:மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
மின்பற்றாக்குறை:மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை ஈடு செய்ய  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்களின்படி,  தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டும் வகையில் மத்திய அரசிற்கு உத்தரவிடுமாறு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்,பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.தமிழகத்தின் மின்  நிலைமை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்காணும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டின் மின் தேவை 12,000 மெகாவாட் என்ற அளவில் இருக்கும்போது,8,000  மெகாவாட் அளவுக்கே மின்சாரம் கிடைத்து வருகிறது.எனவே,தமிழகத்தில் கடுமையான  மின்வெட்டு நிலவுகிறது.இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மானக் கழகம் வெளி மாநிலங்களிலிருந்து 1,100 மெகாவாட் அளவுக்கு  மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை போட்டுள்ளது.

இவ்வாறு ஒப்பந்தங்கள் போடப்பட்டும், மத்திய அரசின் நிறுவனமான
மின்சக்தி தொடர் அமைப்பு நிறுவனம் (Power Grid Corporation of India)  மின் தொடர் கட்டமைப்பின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக  தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை பெற இயலவில்லை.

இந்தச் சூழ்நிலையில்,1.11.2012 முதல் 31.3.2013 வரை டெல்லி அரசு 1,721  மெகாவாட் அளவுக்கு தேவையில்லை என்று ஒப்படைப்பு செய்த மின்சாரத்தை  தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்  எழுதியுள்ளார்.

இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று 24.10.2012 அன்று செய்தியாளர்களிடையே  பேசிய மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் கே.சி. வேணுகோபால்   தெரிவித்தார்.இதே அமைச்சர், 25.10.2012 அன்று செய்தியாளர்களிடையே
பேசும் போது,தொடர் அமைப்பில் உள்ள நெருக்கடி காரணமாக,டெல்லி அரசால்  ஒப்படைக்கப்பட்டுள்ள மின்சாரத்தை தமிழகத்திற்கு அளிக்க இயலாது என்று கூறியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 301-ன்படி, இந்தியா முழுவதும் வணிகம்,  வாணிபம்,தொடர் உறவுகள் ஆகியவை தடையின்றி நிகழ்வுறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் இந்திய  அரசுக்கும்,மாநில அரசுக்கும் இடையே எழும் வழக்கு ஒன்றில் சட்ட முறையான உரிமை  உள்ளதா என்பதையும்,அதன் அளவு என்ன என்பது பற்றியும் பிரச்னை எழும் எனில்,உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை ஈடு செய்ய தமிழ்நாடு மின்  உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்களின்படியும்; டெல்லி  அரசால் ஒப்படைக்கப்பட்ட மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்தும்,கொண்டு  சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும், மத்திய அரசுக்கும்,மத்திய மின்சக்தி தொடர்  அமைப்பு நிறுவனத்திற்கும் உள்ளதால்,தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டும்  வகையில் மத்திய அரசிற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என  அமைச்சரவை தீர்மானிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.