Published:Updated:

தரை தட்டிய கப்பலை இழுக்கும் பணி தொடங்கியது

தரை தட்டிய கப்பலை இழுக்கும் பணி தொடங்கியது
தரை தட்டிய கப்பலை இழுக்கும் பணி தொடங்கியது
தரை தட்டிய கப்பலை இழுக்கும் பணி தொடங்கியது

சென்னை: சென்னை துறைமுகம் அருகே தரை தட்டி நின்ற பிரதீபா காவேரி கப்பலை  இழுவை கப்பல்கள் மூலம் இழுக்கும் பணி இன்று தொடங்கியது.

கடந்த 31-ம் தேதி நீலம் புயல் தாக்கியதில் பெசன்ட் நகரில் நின்றிருந்த பிரதீபா காவேரி  கப்பல் இழுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம் அருகே தரைதட்டி நின்றது. அதில் இருந்து  உயிர் தப்பிக்க கடலில் குதித்த 6 மாலுமிகள் பலியானார்கள். 31 பேர் மறுநாள்  உயிருடன் மீட்கப்பட்டனர். அந்த கப்பலில் 360 டன் கச்சா எண்ணை உள்ளது.

கப்பல் மேலும் சாய்ந்தால் கச்சா எண்ணை கடலில் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே  கப்பலை மீட்கும் பணியில் கப்பல்துறை சம்பந்தப்பட்ட என்ஜினீயர்களும்,அதிகாரிகளும்  ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக காக்கிநாடா, மும்பையில் இருந்து மாளவிகா, ரத்னா என்ற 2 இழுவை  கப்பல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன.

நேற்று சோதனை முறையில் பிரதீபா கப்பலை பைலட் கப்பல் மூலம் இழுக்கும் பணி  நடந்தது. பிரதீபா கப்பலின் நங்கூரம் பகுதியில் ராட்சத கயிறு கட்டி அதை 1 கி.மீ.  தொலைவில் இருந்து பைலட் கப்பல் இழுத்தது. ஆனால் கப்பலை அசைக்க கூட  முடியவில்லை. எனவே பிரதீபா கப்பல் கடலுக்கு அடியில் ஆழமாக புதைந்து இருக்கலாம்  என்று கருதப்படுகிறது.

##~~##
இதையடுத்து இழுவை கப்பல்கள் மூலம் பிரதீபா கப்பலை இழுக்கும் பணி தொடங்கியது.  முதலில் மாளவிகா கப்பல் மூலம் இழுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதற்காக  மாளவிகா கப்பல் 2 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.அதில் இருந்து  பெரிய பருமன் கொண்ட ராட்சத கயிறு மூலம் பிரதீபா கப்பலை சுற்றி கட்டப்பட்டது.  முன்எச்சரிக்கையாக கடலில் 2 கி.மீ. தூரத்துக்கு மீன்பிடி படகுகள் செல்ல தடை  விதிக்கப்பட்டது.
இந்த பணியை வேடிக்கை பார்க்க கடற்கரையில் மக்கள் திரண்டனர். அவர்களையும்  போலீசார் நெருங்க விடாமல் தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார்கள். கடலோர  காவல்படை படகுகள் கடலில் ரோந்து சுற்றி கண்காணித்தப்படி இருந்த நிலையில்  கப்பலை இழுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.ஆனால் கப்பலை இழுக்க முடியவில்லை.
இதையடுத்து 2 இழுவை கப்பல்கள் மூலம் ஒரே நேரத்தில் பிரதீபா கப்பலை இழுக்க  முடிவு செய்யப்படடது. இதற்காக துறைமுகத்தில் நின்றிருந்த ரத்னா கப்பல்  வரவழைக்கப்பட்டது.அதில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்கு ராட்சத பருமன் கொண்ட கயிறு  கட்டி பிரதீபா கப்பலை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கப்பலை மீட்கும்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காகவும், கப்பல் எடை  மற்றும் அது புதைந்து இருக்கும் ஆழத்தை கணிப்ப தற்காகவும் முதலில் சோதனை  இழுவை, அடுத்து ஒரு இழுவை கப்பல் மூலம் இழுவை, தொடர்ந்து 2-வது கப்பல்  மூலம் இழுவை என படிப்படியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மீட்பு பணியில்  ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 3 முயற்சிகளும் பலன் அளிக்காவிட்டால் சேதுசமுத்திர திட்டத்தில் கடலை கப்பல்  மூலம் ஆழப்படுத்தியதுபோல் பிரதீபா கப்பல் புதைந்துள்ள இடத்தை சுற்றிலும் உள்ள  கடலை ஆழப்படுத்தி அதன் வழியே கப்பலை மீட்கும் பணி நடைபெறும். இதற்கான  பணியை ரத்னா கப்பலே மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.