Published:Updated:

சி.ஏ.ஜி.யை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சி?

Vikatan Correspondent
சி.ஏ.ஜி.யை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சி?
சி.ஏ.ஜி.யை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சி?
சி.ஏ.ஜி.யை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சி?

புதுடெல்லி: சி.ஏ.ஜி. அமைப்பை பல உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றுவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது சி.ஏ.ஜி. அமைப்பைப் பலவீனப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி,இது தொடர்பாக அளித்த பேட்டியில்,தலைமை கணக்குத் தணிக்கை (சி.ஏ.ஜி.) அமைப்பை மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் சி.ஏ.ஜி. வி.கே.ஷுங்லு தலைமையிலான குழு தெரிவித்துள்ள யோசனை குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,"சி.ஏ.ஜி. அமைப்பில் மாற்றங்களைச் செய்து பல உறுப்பினர் கொண்ட அமைப்பாக அதை மாற்றுவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அனைத்து அரசமைப்புச்சட்ட அமைப்புகளும் தமக்குள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

அரசு எடுக்கும் முடிவுகள் குறித்து சி.ஏ.ஜி. விமர்சித்து வருவது மிகவும் துரதிருஷ்டவசமானது. சமீப காலமாக தேவையற்ற கருத்துகளை அது தெரிவித்து வருகிறது. தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் மிகவும் பொறுமையிழந்து வருகிறார்.இவ்வாறு கூறுவதால் நான் விமர்சனம் செய்வதாக அர்த்தம் இல்லை.

அரசின் பல்வேறு துறைகளும் செலவுகளை உரிய முறையில் மேற்கொள்கின்றனவா? என்பதை ஆராய்வதே சி.ஏ.ஜி.யின் வேலை.அந்த அமைப்பு தனது வரம்பைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.

##~~##
இது என் தனிப்பட்ட கருத்துதான்.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தனது வரம்புக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இல்லாவிட்டால் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு விடும்.
2ஜி அலைக்கற்றை,நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகிய முறைகேடுகள் குறித்து சி.ஏ.ஜி. அளித்த அறிக்கைகள் குறித்து கேட்கிறீர்கள்.இவற்றில் முறைகேடுகள் நடந்ததா என்பதைப் பரிசீலிக்க வேண்டியது நாடாளுமன்றம்தான்.
சி.ஏ.ஜி. அறிக்கையானது, மக்களவைத் தலைவர் முன் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர் அதை பொதுக் கணக்குக் குழுவுக்கு (பி.ஏ.சி.) அனுப்பி வைப்பார்.சிஏஜி தெரிவித்த கருத்துக்களை பி.ஏ.சி. ஆராய்ந்து, அறிக்கை தரும். சி.ஏ.ஜி. சொல்வதாலேயே அது இறுதியான கருத்து ஆகாது.
அதன் அறிக்கையை பி.ஏ.சி. சோதிக்க வேண்டியுள்ளது.பொதுக் கணக்குக் குழு என்பது நாடாளுமன்றத்தின் அங்கமாகும்.அது அறிக்கை அளித்த பின்பே அரசால் நடவடிக்கை எடுக்க முடியும்.
சி.ஏ.ஜி. ஆயிரக்கணக்கான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளது. அவர்கள் பல்வேறு மாநில முதல்வர்கள்,பல்வேறு மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குறை கூறியுள்ளனர். சி.ஏ.ஜி. அறிக்கைதான் இறுதியானது என்றால்,எந்த முதல்வரும் பதவியில் தொடர முடியாது.சி.ஏ.ஜி. அறிக்கைகள் கசிய விடப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.இது தடுக்கப்பட வேண்டும்" என்றார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இதனிடையே இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, ""சி.ஏ.ஜி. அமைப்பை பல உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றுவது என்பது மோசமான யோசனை.
இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்துக்கும், சி.ஏ.ஜி.க்கும் வித்தியாசம் உள்ளது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை ஒரு ஆணையமாகக் கருத முடியாது.
எனவே, சி.ஏ.ஜி. அமைப்பை பல உறுப்பினர் அமைப்பாக மாற்ற முடியாது. இப்போதைய சி.ஏ.ஜி. வினோத் ராய்க்கு வாய்ப்பூட்டு போடவும், இந்த அமைப்பைப் பலவீனமாக்கவுமே அரசு இவ்வாறு திட்டமிடுகிறது. சி.ஏ.ஜி. அமைப்பைக் குலைக்க அவர்கள் தயாராகி வருகின்றனர் " என்றார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், "சி.ஏ.ஜி. அளித்துள்ள அறிக்கைகள் காரணமாக, அந்த அமைப்பின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய அரசு முயற்சிக்கிறது.வினோத் ராய் மிகவும் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.
அவரது சிறகுகளை ஒடிக்க அரசு முயல்கிறது.தலைமைத் தேர்தல் ஆணையராக சேஷனின் அதிகாரத்தைக் குறைப்பதற்காக தேர்தல் ஆணையத்தைப் பல உறுப்பினர் அமைப்பாக அரசு மாற்றியது.ஷுங்லு குழுவின் அறிக்கையை அரசு அமல்படுத்தக் கூடாது"  என்றார்.
இதேபோல்,சி.ஏ.ஜி.யைப் பல உறுப்பினர் அமைப்பாக்குவதற்கு சமூக ஆர்வலர் கிரண் பேடி,முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சி.வி.சி.) என்.விட்டல் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாராயணசாமி மறுப்பு
இதனிடையே, சி.ஏ.ஜி.யைப் பல உறுப்பினர் அமைப்பாக்குவது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என்றும் தனது கருத்து திரித்து வெளியிடப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆனால்,அவர் பேட்டியளித்த பி.டி.ஐ. செய்தி நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் "அமைச்சர் நாராயணசாமி எங்கள் செய்தியாளருக்கு அளித்த பேட்டி டேப் ரிகார்டரில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர் கூறிய கருத்தையே நாங்கள் வெளியிட்டோம். அமைச்சர் குறைகூறியது போல் அவரது கருத்து திரிக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளது.