Published:Updated:

’’எதிர்ப்புக்குப் பணிந்த மத்திய அரசு’’ - பாஸ்போர்ட் மாற்றங்கள் திட்டத்தைக் கைவிட்டது!

தினேஷ் ராமையா
’’எதிர்ப்புக்குப் பணிந்த மத்திய அரசு’’ - பாஸ்போர்ட் மாற்றங்கள் திட்டத்தைக் கைவிட்டது!
’’எதிர்ப்புக்குப் பணிந்த மத்திய அரசு’’ - பாஸ்போர்ட் மாற்றங்கள் திட்டத்தைக் கைவிட்டது!

பாஸ்போர்ட்டுகளில் மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2 மாற்றங்களையும் கைவிடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


பொதுவாக பாஸ்போர்ட்டுகளின் கடைசிப் பக்கத்திலேயே முகவரி, பெற்றோர் அல்லது காப்பாளர் மற்றும் கணவன் அல்லது மனைவி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். பாஸ்போர்ட்டுகளில் தந்தையின் பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற விதியை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்தனர். இதையடுத்து, வெளியுறவுத்துறை மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழு இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் எந்த விவரமும் அச்சிடாமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மேலும், பாஸ்போர்ட்டுகளை ஆரஞ்சு வண்ணத்தில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தநிலையில், பாஸ்போர்ட்டுகளில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2 மாற்றங்களையும் கைவிடுவதாக மத்திய வெளியுறவுத் துறை தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பாஸ்போர்ட் மாற்றங்கள் குறித்த அரசின் முடிவைக் கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், அந்த முடிவுகளைக் கைவிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் அச்சிடுவதில் பழைய நடைமுறைகளே பின்பற்றப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.