Published:Updated:

தர்மபுரி: 97 கிராமங்களில் தடை உத்தரவு அமல்!

தர்மபுரி: 97 கிராமங்களில் தடை உத்தரவு அமல்!
தர்மபுரி: 97 கிராமங்களில் தடை உத்தரவு அமல்!
தர்மபுரி: 97 கிராமங்களில் தடை உத்தரவு அமல்!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 97 கிராமங்களில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
காதல் மற்றும் கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட தகராறில் தர்மபுரி மாவட்டம் நத்தம்  காலனி உள்பட 3 கிராமங்களில் ஒரு பிரிவினர் புகுந்து வீடுகளை சூறையாடினர்.  வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  மொபட்டுகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பத்திரங்கள், கல்விச் சான்றிதழ்கள்,  ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தீ  வைத்து கொளுத்தியது. பலர் தாக்கப்பட்டனர்.
 
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரம்  நடந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள போதிலும், மீண்டும் அவ்வப்போது  தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக,தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுக் கூட்டம்,  ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆர். லில்லி வெளியிட்டுள்ள  அறிக்கையில்,"தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி 3 கிராம மக்கள்  தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்த தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும்  வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாவில் 97 கிராமங்கள் மற்றும் சில  நகர்ப்புற பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போலீஸ் அனுமதி இன்றி  பொது இடங்களில் கூடுதல் ஆகிய செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
 
கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு  அலுவலகங்கள் இவற்றுக்கு மட்டும்  தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து  கூட்டங்களை  சேர்த்தல், சமூக ரீதியான கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்  போன்றவற்றுக்கு தர்மபுரி மாவட்டத்திற்கு  வருகை தரக்கூடாது. இந்த தடை உத்தரவு  நேற்று இரவு முதலே அமுலுக்கு வந்தது.மேலும் இந்த தடை மறு உத்தரவு வரும் வரை  அமுலில் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.