Published:Updated:

‘பிப்ரவரி15-ல் தீக்குளிப்பேன்' என முதல்வருக்கு கடிதம்! - அதே நாளில் தீக்குளித்து உயிரை மாய்த்த குஜராத் சமூக ஆர்வலர்

அஸ்வினி.சி
‘பிப்ரவரி15-ல் தீக்குளிப்பேன்' என முதல்வருக்கு கடிதம்! - அதே நாளில் தீக்குளித்து உயிரை மாய்த்த குஜராத் சமூக ஆர்வலர்
‘பிப்ரவரி15-ல் தீக்குளிப்பேன்' என முதல்வருக்கு கடிதம்! - அதே நாளில் தீக்குளித்து உயிரை மாய்த்த குஜராத் சமூக ஆர்வலர்
‘பிப்ரவரி15-ல் தீக்குளிப்பேன்' என முதல்வருக்கு கடிதம்! - அதே நாளில் தீக்குளித்து உயிரை மாய்த்த குஜராத் சமூக ஆர்வலர்

குஜராத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த சமூக ஆர்வலர் பானுபாய் வங்கர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

குஜராத் மாநிலம் பத்தன் மாவட்டத்தில்தான் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்தன் மாவட்டத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதாக  3 ஆண்டுகளுக்கு முன் குஜராத் மாநில அரசு அறிவித்திருந்தது. ஒருசில கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நிலம் ஒதுக்கீடு  செய்யப்பட்டது. ஆனால், அதிலும் குளறுபடி. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டு,  சட்டபூர்வமாகப் பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பலனில்லை. 

பத்தன் மாவட்ட பட்டியலின மக்களுக்காகச் சமூக ஆர்வலரும் ஓய்வு பெற்ற வருவாய் எழுத்தருமான பானுபாய் வங்கர் களமிறங்கினார். இவர் ஜிக்னேஷ் மேவானியின் ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச் அமைப்பைச் சேர்ந்தவர். வங்கர் மக்களுடன் ஒருங்கிணைந்து அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மனுக்கள் அனுப்பினார். ஆனால், யாருமே நில ஒதுக்கீடு செய்யும் பணிகளைத் தொடங்கவில்லை. மூன்றாண்டு போராட்டத்துக்கு தீர்வு எட்ட நினைத்த வங்கர் சக சமூக ஆர்வலர்களுடன் இணைந்து கடந்த ஜனவரி 17-ம் தேதி குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தனர். அதில் `துக்கா கிராம பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலங்களை உடனடியாகச் செய்து தர வேண்டும். கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் பிப்ரவரி 15-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்போம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று பத்தன் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் படேலுக்கு பிப்ரவரி 7-ம் தேதி கடிதம் அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பிப்ரவரி 15-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீயணைப்புக் கருவிகளுடன் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

வங்கர் மற்றும் அவரின் நண்பர்கள் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். தீக்குளிக்க முயன்ற இருவரை போலீஸ் தடுத்துவிட்டனர். ஆனால், வங்கர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வங்கரின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார். ஆனால், 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது போராளி பானுபாய் வங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஜிக்னேஷ் மேவானி ‘தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்வது அரசுக்குதான் அவமானம். மூன்று ஆண்டுகள் போராடியும் பலன் கிடைக்கவில்லை. தீக்குளிப்போம் என்று கடிதம் அனுப்பியும் நில ஒதுக்கீடு செய்ய நடவடிக்க எடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்கு காரணமான பத்தன் மாவட்ட ஆட்சியர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தயவு செய்து தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்.