Published:Updated:

”நேதாஜி சாகவில்லை..மலேசிய காட்டில் இருக்கிறது மர்மம்!”- ஐ.என்.ஏ வீரர் துரைராஜ்

”நேதாஜி சாகவில்லை..மலேசிய காட்டில் இருக்கிறது மர்மம்!”- ஐ.என்.ஏ வீரர் துரைராஜ்
”நேதாஜி சாகவில்லை..மலேசிய காட்டில் இருக்கிறது மர்மம்!”- ஐ.என்.ஏ வீரர் துரைராஜ்

"நான் அவரை முதன்முதலில் பார்த்தது மலேசியா டெலிக் & சன், பெராங்கில் நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில்தான். அங்கு இருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்பு அவர் ஒரு சிங்கம்போல ஆற்றிய உரை இன்றுவரை எனக்கு மனப்பாடம். உரையின் இறுதியில், 'நம் நாடு சுதந்திரம் அடைய வேண்டுமானால் வாலிபர்களெல்லாம் மிலிட்டரியில் சேருங்கள். வர இயலாத வயோதிகர்கள் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். ஆனால், இங்கு உங்களுக்குச் சம்பளம் கிடையாது. உணவு மட்டுமே தர முடியும்' என்றார் நேதாஜி. என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்களே தம்பி" - ''நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை நேரில் பார்த்திருக்கிறீர்களா?'' என்று ஆர்வகோளாறில் நாம் கேட்ட கேள்விக்கு அந்தத் தாத்தா சொன்ன பதில் இது. 

அந்தத் தாத்தாவின் பெயர் துரைராஜ். தற்போது, அவருக்கு 98 வயது. நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் படைவீரராக இருந்தவர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நடத்திய விழாவில் கலந்துகொண்டு ஊருக்குச் செல்ல ஆயத்தமானவரை நேரில் சந்தித்தோம். 'ஆனந்த விகட'னில் இருந்து வருகிறோம் என்று கூறியவுடன் உற்சாகமானார். கேட்ட  அனைத்துக் கேள்விகளுக்கும் தன் நினைவு அடுக்குகளில் இருந்து துல்லியமாகப் பதில் கூறினார். 

"நான் 1920-ம் வருடம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவம்பட்டியில் பிறந்தேன். என் அப்பாவுக்கு மலேசியாவில் வேலை. அதனால், எட்டு வயதிலேயே குடும்பத்தோடு மலேசியாவுக்குக் குடிபெயர்ந்தோம். 8-ம் கிரேடு வரை படித்திருக்கிறேன். படிப்பு முடிந்ததும் டெய்லரிங் தொழிலை செய்து வந்தேன். மேற்கூறிய விஷயம் நடந்தபோது எனக்கு 22 வயது. நேதாஜியின் கம்பீரத்தில் அத்தனை வசீகரம். அத்தனை உண்மை. நானும் ராணுவத்தில் சேர முடிவெடுத்தேன். என் குடும்பத்தினர் எனக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் என்னை ராணுவத்துக்கு அனுப்பி வைத்தனர். சில தினங்களில் 180 மலேசிய வாழ் இந்தியர்கள் ஐ.என்.ஏ-வில் இணைந்தோம். அதன்பிறகு ஆறு மாதம் கடும் பயிற்சி. பயிற்சி முடிந்ததும் போர் நிகழும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஐ.என்.ஏ-வில் இருந்த பத்து டிவிஷனில் நான் 2-வது டிவிஷன். அதிலுள்ள 7-வது கொரில்லா ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேர்ந்தேன். மாதத்திற்கு ஒருமுறை வீரர்களை உற்சாகமூட்ட நேதாஜி கேம்புக்கு வருவார். அவருடைய பேச்சு எங்களுக்கு புதுத் தெம்பை தரும். நான் ஒரு சாதாரண படைவீரன் என்பதால் அவருக்கு அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டவில்லை. அவரது பேச்சுகளைக் கேட்டதே பெரும் பாக்கியம்தானே!!! 

மலேசியாவில் இருந்த 2-வது பெட்டாலியனில் 20 ஆயிரம் பேர் இருந்தோம். இந்தியாவில் இருந்த ஒரு 
பெட்டாலியனை இம்பாலுக்கு அனுப்பி வைத்தார் நேதாஜி. அந்தப் படை மணிப்பூர் அருகே கொகிமா என்ற நகரைக் கைப்பற்றியது. அந்தச் சமயத்தில் நான் இருந்த பெட்டாலியன், மலேசியாவில் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் வான்வழியாகத் தாக்குதல் நிகழ்த்துவதில் தீவிரமாக இருந்தனர். கொகிமா காட்டில் ஒரு பெட்டாலியன் பிரிட்டிஷ் வசம் சிக்கியது. ஏராளமான வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். படைத்தளபதிகளான ஷானவாஸ், பில்லன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான், ஹிரோஷிமாவில் அணுகுண்டு தாக்குதல் நடந்தது. ஜப்பான், அமெரிக்காவிடம் சரணடையும் நிலை வந்தது. அதற்கு முன்பு நேதாஜியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜப்பானியர்கள் நேதாஜியை தப்ப வைத்தனர். மேலும், விமானத்தில் செல்லும்போது நேதாஜி இறந்ததாகப் பதிவு செய்தனர். 

மலேசியாவில் இருந்த படைப்பிரிவில் நான் பணியாற்றியபோதுதான் தைபேயில் (தைவான்) அந்த விமான விபத்து நடைபெற்றது. நாங்கள் இருந்த இடத்தின் பெயர் சித்ரா கேம்ப். விபத்தில் நேதாஜி இறந்ததாகச் சொல்லப்படும் இடத்திற்கும் எங்களுக்கும் 40 மைல் தொலைவுதான். ஒருவேளை அவர் விமான விபத்தில் இறந்திருந்தால் எங்கள் படைப்பிரிவிற்கு உடனே தெரிவிக்கப்பட்டிருக்கும். அதற்கான அத்தனை சாத்தியமும் அப்போது இருந்தது. அவரது இறுதிச் சடங்கும் உடனே நடைபெற்றிருக்கும். ஆனால், அது மாதிரியான எந்த நிகழ்வும் அப்போது நடைபெறவில்லை. அனைத்தும் கட்டுக்கதை. நேதாஜி இறந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கூட நாங்கள் பேப்பரைப் பார்த்துதான் அறிந்துகொண்டோம். ஆனால், நாங்கள் யாரும் நம்பவில்லை. மேலும், அவர் இறப்பை உறுதிப்படுத்த வாக்குமூலம் தந்த மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒரேவிதமான வாக்குமூலத்தைதான் தந்தார்கள். அவை முன்னேற்பாடாகச் செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் சிலர் 'நேதாஜி ஜப்பானிலிருந்து ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டார்' என்றனர். 'அவர் உயிரோடுதான் இருப்பார்' என்னும் நம்பிக்கையிலேயே நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்தோம்." 

"அதன்பிறகு உங்களது ஐ.என்.ஏ படை என்னவானது?"

"பிரிட்டிஷிடம் ஜப்பான் சரணடைந்தபோது, நாங்கள் ஜப்பானுக்குட்பட்ட காட்டில் பதுங்கியிருந்தோம். நேதாஜி, மலேசியாவை விட்டு இறுதியாகக் கிளம்பும்போது, 'ஜப்பான் சரணடைந்ததால் நாமும் சரணடைய வேண்டிய அவசியமில்லை. நமது கொடி செங்கோட்டையில் பறக்கும்வரை நமது முயற்சி தொடர வேண்டும். நீங்கள் அனைவரும் எப்போதும் தயாராக இருங்கள். அடுத்த தகவல் வரும்வரையில் இந்தக் காட்டில் இருங்கள். தகவல் கிடைத்ததும் போருக்குச் செல்லுங்கள்' என்று கூறிவிட்டு சென்றார். அதன்படி நாங்களும் அந்தக் காட்டில் மறைந்து வாழ்ந்தோம். அப்போது மலேசியா வந்த நேருவும், இந்திராகாந்தியும் எங்களைச் சந்தித்து,
'இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கப் போகிறது. இனியும் நீங்கள் யுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மலேசியாவில் இருந்து யுத்தத்திற்கு வந்தவர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். இந்தியாவில் இருந்து இங்கு வந்தவர்கள் ராணுவ முகாமில் இருங்கள்' எனக் கூறினார்கள். அதன்பிறகு, நான் மலேசியாவில் உள்ள என் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். யுத்தத்தின்போது வீட்டுக்குப் போக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. நண்பர்கள் இறந்தபோதும் நாட்டுக்காக உயிர் கொடுக்கும் பாக்கியம் கிட்டியதே என்ற உற்சாகம் ஏற்படுமே தவிர, திரும்பப் போக வேண்டும் என்று ஒருநாளும் நினைத்ததில்லை. ஆனால், நேருவின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அன்று கலைந்துவிட்டேன். மெல்ல மெல்ல ஐ.என்.ஏ-வும் கலைந்து விட்டது." 

"நேதாஜியிடம் தங்களுக்குப் பிடித்தது என்ன?"

"தன்னைப்போல பிறரையும் நினைக்கக்கூடியவர் நேதாஜி. காந்தி அகிம்சையில் போராடியபோது, நேதாஜி யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். போரின்போது வீரர்கள் யாராவது இறந்து விட்டால் அவரின் கண்கள் கண்ணீர் சிந்தும். அதே சமயம் போர் என வந்துவிட்டால், முதலில் நேதாஜிதான் களத்திற்கு வருவார். அவருக்குப் பின்தான் வீரர்கள் செல்வார்கள். எந்த ஆபத்து வந்தாலும் முதலில் தனக்கு ஏற்படட்டும் என்று எண்ணும் மனம் கொண்டவர் அவர். படையில் இருக்கும் ஒவ்வொரு உயிரின்மீதும் மிகுந்த அக்கறை செலுத்தினார். ஒவ்வொரு முறையும், 'ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் போராடித்தான் செய்ய முடியும்' என்று தவறாமல் குறிப்பிடுவார்." 

"உங்களுடைய திருமண வாழ்க்கை பற்றி?"

"ராணுவத்துக்குச் செல்வதற்கு முன்னரே திருமணம் நடந்துவிட்டது. 1942 ஜனவரியில் எனக்குத் திருமணம், அக்டோபரில் ராணுவத்தில் சேர்ந்துவிட்டேன். என் மனைவிக்கு என்னைப் பிரிய மனம் இல்லை. அவளை என் வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டேன். பிறகு 1945-ல்தான் என் மனைவியைப் பார்த்தேன். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மலேசியாவில் இருந்தோம். குடும்பத்தோடு கொண்டாடினோம். 1948-ல் திருச்சிக்கு வந்திறங்கிய நாள் ஜனவரி 30. அன்றுதான் காந்தி மரணமடைந்தார். அதன்பிறகு டெய்லர் வேலைதான் செய்து வந்தேன். மொத்தம் ஏழு பிள்ளைகள். நேதாஜி மீதான பிரியத்தால் அப்போது பயன்படுத்திய தொப்பி போன்றே தற்போதும் தைத்துப் போட்டுக்கொள்கிறேன். தற்போது, ஈரோட்டில் வசித்து வருகிறோம். சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று  ஈரோடு நகராட்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிகளில் கலந்துகொள்வேன். ஈரோடு புனித அமல அன்னை ஆலயம் முன்பு ஒரு சிறிய கடையில் ஜபமாலை போன்ற பொருள்களை விற்பனை செய்து வருகிறேன். ராணுவத்தில் இருந்தாலும் மாமிசம் சாப்பிடும் பழக்கம் இல்லை" 

"இன்றைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறிர்கள்?"

"இன்றைய இளைஞர்களுக்கு ஒற்றுமை முக்கியம். நாங்கள், அன்று கடைப்பிடித்த ஒற்றுமையால்தான் பிரிட்டிஷ்  பிடியில் இருந்து இந்தியா மீண்டது. இளைஞர்களின் ஒற்றுமைதான் பாரதத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். வாழ்க பாரதம்! ஜெய் ஹிந்த்!".

நம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் விடையே தெரியாத ஒரு புதிர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம். அவர் அமரராகி விட்டார் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், அவர் இந்திய சரித்திரத்திலும், இந்திய மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நிலைத்திருக்கிறார் என்பது மறுக்க இயலாத உண்மை!! அதைத்தான் இந்த நேர்காணலும் உறுதிப்படுத்துகிறது!