`இரு மாநிலப் போலீஸார் இணைந்து நடத்திய என்கவுன்டர்’ - மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை!

`இரு மாநிலப் போலீஸார் இணைந்து நடத்திய என்கவுன்டர்’ - மாவோயிஸ்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை!
தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலப் போலீஸார் இணைந்து நடத்திய என்கவுன்டரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Photo Credit: ANI
சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிஜாப்பூர் மாவட்டத்தின் புஜாரி காங்கெர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் முகாமிட்ட சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலச் சிறப்பு அதிரடிப்படையினர் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகளைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஹரி பூஷன் உள்ளிட்ட 10 மாவோயிஸ்டுகள் உயிரிழந்ததாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள் நடத்திய பதில் தாக்குதலில் சிறப்பு அதிரடிப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். காயமடைந்த அவரை பத்ராச்சலம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சம்பவம் நடந்த பகுதியிலிருந்து பெருமளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் அதிகாலையில் தொடங்கியதாகத் தெரிவித்துள்ள நக்சல் எதிர்ப்புப் படை டி.ஜி. டி.எம். அஸ்வதி, 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.