Published:Updated:

கம்யூனிஸ்ட் கட்சி போஸ்டரிலும் இடம்பிடித்த பிரியா வாரியர்!

பிரதீப்.த.ரே
கம்யூனிஸ்ட் கட்சி போஸ்டரிலும் இடம்பிடித்த பிரியா வாரியர்!
கம்யூனிஸ்ட் கட்சி போஸ்டரிலும் இடம்பிடித்த பிரியா வாரியர்!

கண்சிமிட்டல் மூலம் சமீபத்தில் புகழ்பெற்ற மலையாள நடிகை பிரியா வாரியர் கம்யூனிஸ்ட் கட்சி போஸ்டர்களிலும் இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களை ஆக்கிரமித்தவர் நடிகை பிரியா வாரியர். கேரளாவைச் சேர்ந்த இவர் 'ஒரு அடார் லவ்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் பிரியா வாரியர் கண்சிமிட்டும் காட்சி அனைவரையும் கவர்ந்தது. தேசிய அளவில் அந்தப் பாடல் ட்ரெண்டானது. பிரியா வாரியாரும் பெரும் புகழ்பெற்றார்.

இதற்கிடையே, அந்தப் பாடல் வரிகள் தங்கள் மதநம்பிக்கையைப் புண்படுத்துவதாகக் கூறி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களால், ஹைதராபாத் ஃபாலக்னுமா காவல் நிலையத்தில் பிரியா வாரியர் மற்றும் அந்தப் படத்தின் இயக்குநர்மீது புகார் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட பிரியா வாரியார் வழக்கு விசாரணைக்குத் தடை பெற்றார்.

இந்நிலையில், பிரியா வாரியரின் கண் சிமிட்டும் புகைப்படம் கேரள கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கவர்ந்திழுத்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்காக அடிக்கப்பட்ட போஸ்டர்களில் பிரியா வாரியர் கண் சிமிட்டும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

இதுபற்றி கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாணவர் பேரவையின் இணைச் செயலாளர் ஜம்ஷீர் கூறுகையில், “இந்தப் படத்திற்கு எதிராகக் கொந்தளித்த அடிப்படைவாதிகளைக் கண்டிக்கும் வகையிலும், திரைப்படம் எடுப்பவர்களின் கருத்துரிமையப் பாதுகாக்கும் வகையிலும் பிரியா வாரியரின் படத்தை போஸ்டரில் இடம்பெறச் செய்தோம்” என்றார்.