Published:Updated:

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை கட்டுப்பாடு; நிபந்தனை!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை கட்டுப்பாடு; நிபந்தனை!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை கட்டுப்பாடு; நிபந்தனை!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை கட்டுப்பாடு; நிபந்தனை!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள  காவல்துறை, பெண்களிடம் ஈவ்டீசிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில்,இன்று மாலை முதலே சென்னை,கோவை  உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று  வருகின்றன.

சென்னையில் வழக்கம்போல் நட்சத்திர ஓட்டல்கள் மட்டுமல்லாது மெரினா  கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

இதனையொட்டி நகர் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் இதற்காக 18 ஆயிரம் போலீசார்  குவிக்கப்படுகிறார்கள்.

##~~##
டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும்  தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.டெல்லி,ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில்  புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக நட்சத்திர ஓட்டல்கள்  அறிவித்துள்ளன.
இந்நிலையில் சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தாண்டு  கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டெபானி என்ற பெண், ஈவ்டீசிங் கொடுமைக்கு  பலியாகி விட்டார். இது போன்ற சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார்  உறுதியாக உள்ளனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு தீவிர  பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே புத்தாண்டு பாதுகாப்பு தொடர்பாக சென்னை நகர காவல்துறை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
* உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக  சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு  செய்யப்பட வேண்டும்.
* புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கங்களில் மட்டுமே  நடத்தப்பட வேண்டும். நட்சத்திர ஓட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக,  தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி  செய்யும் வண்ணம், பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரிடமிருந்து  தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
* நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ மேடை அமைத்தல் கூடாது. மது  அருந்தியவர்களை நீச்சல்குளம் அருகே போக அனுமதிக்கக்கூடாது. நீச்சல் குளத்திற்கு  செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள்  ஏற்படுத்தப்பட வேண்டும்.
* வாகனங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தும் இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட  வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளின் முடிவில், குடிபோதையில் உள்ளவர்கள்  வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் அனுமதிக்கக் கூடாது. உணவு  மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்களை சாலைகளில் நிறுத்த  நிர்வாகத்தினர் அனுமதித்தல் கூடாது. இவ்விதி மீறல் ஏதேனும் நிகழுமாயின்,  நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
* நட்சத்திர ஓட்டல்களில், மதுபானங்கள் அனுமதிக்கப்பட்ட பார்களைத்தவிர, இதர  பகுதிகளில் பரிமாறுதல் கூடாது. குறிப்பாக நடன நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பரிமாற  அனுமதிக்கக்கூடாது.
.* நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் இதர கேளிக்கை கூடங்களில் உணவு மற்றும் மதுபான  சேவை (உரிமத்துடன்) அதிகாலை 2 மணிக்குள் முடித்துக்கொள்ளப்பட வேண்டும்.  நேரக்கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.
* குடிபோதை மற்றும் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை உணவு விடுதி  நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
* கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை இழிவாக கேலி செய்வதை தடுக்க,  போதுமான ஊழியர்களை நியமித்தல் வேண்டும். நடன நிகழ்ச்சியில் எல்லை மீறி நடக்க  அனுமதிக்க கூடாது.ஆபாசம் கலக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* உணவு விடுதி வளாகத்தினுள் கண்டிப்பாக பட்டாசு வெடித்தல் கூடாது.
* மேற்கூறிய விதிமுறைகளை மீறும் உணவு மற்றும் கேளிக்கை விடுதி நிர்வாகத்தினர்  மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது.  பெண்களை இழிவான முறையில் கேலி மற்றும் கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும். வாழ்த்து சொல்லும் போர்வையில் கைகுலுக்கி கிண்டல்  செய்யக்கூடாது.
* பிறர் மீது வர்ணப்பொடிகள், வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பொது மக்கள்  தவிர்த்தல் வேண்டும்.
* குடிபோதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி கடும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
* இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீதும் கடும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* பொது மக்கள் கடலில் விளையாடுதல் மற்றும் படகுகளில் ஏறி கடலுக்குள் உல்லாச  சவாரி செல்ல முற்படுவதை தவிர்த்தல் வேண்டும். படகில் உல்லாச சவாரி  ஏற்றிச்செல்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும்
* வரும் புத்தாண்டை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட, காவல் துறை  வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு  நல்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.