Published:Updated:

'2ஜி ஊழலை விசாரிக்கும் ஜேபிசி-யில் 30 உறுப்பினர்கள்: திமுக 2, அதிமுக 1'

புதுடெல்லி, பிப்.23,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பதற்கு அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் (ஜேபிசி) 30 உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ##~~##

முன்னதாக, ஜேபிசி-யில் 21 உறுப்பினர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதில், அதிமுக உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஜேபிசியில் 30 உறுப்பினர்கள் இருக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று பிஜேபி அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்து தங்கள் கட்சி உள்பட சிறிய கட்சிகளும் இடம் பெறும் வகையில் கூடுதல் உறுப்பினர்களை நியமிக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, அவர்கள் மத்திய அரசை தொடர்பு கொண்டு கூட்டுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக உயர்த்தும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கூட்டுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை 30 ஆக உயர்த்த மத்திய அரசு சம்மதித்து விட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜேபிசியில் காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ தலைமை வகிப்பார் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 30 உறுப்பினர்களில், காங்கிரஸின் மக்களவை உறுப்பினர்கள் 8 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் மூவரும் இடம்பெறுவர்.

பிஜேபியில் மக்களவை உறுப்பினர்களில் 4 பேரும், அதன் கூட்டணியில் உள்ள சிவசேனா மக்களை உறுப்பினர் ஒருவரும், பிஜேபியின் மாநிலங்களை உறுப்பினர் இருவரும் அங்கம் வகிப்பர்.

திமுகவில் இருந்து 2 உறுப்பினர்களும், அதிமுகவில் இருந்து ஒருவரும் இருப்பார்கள்.

எனினும், உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.