Published:Updated:

விஸ்வரூபம் படத்திற்கு 28 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு!

Vikatan Correspondent
விஸ்வரூபம் படத்திற்கு 28 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு!
விஸ்வரூபம் படத்திற்கு 28 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு!
விஸ்வரூபம் படத்திற்கு 28 ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு!

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 28 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் 25 ஆம் தேதி ( நாளை) வெளியாக  இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தை  வெளியிட செய்ய இரண்டு வாரத்திற்கு தமிழக அரசு நேற்று தடை விதித்தது.
 
இந்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது.  இவ்வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, இன்று மதியம் நீதிபதி  கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக விஸ்வரூபம் பட தயாரிப்பாளர்களான கமல்ஹாசன், சந்திரஹாசன்  ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.

அவர் வாதிடுகையில்," தமிழக அரசு சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி 

##~~##
விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்துள்ளது. நாளை விஸ்வரூபம் படத்தை வெளியிட  திட்டமிட்டு இருந்தோம். இந்த படத்துக்கு மத்திய தணிக்கை துறை சான்றளித்து உள்ளது.  தணிக்கை துறை  சான்றளித்த பின்பு படத்துக்கு தடைவிதிக்க முடியாது. இந்த தடை உத்தரவால் ரூ.95 கோடி செலவில் படத்தை தயாரித்த பட நிறுவனத்துக்கு இழப்பு  ஏற்படும். எனவே தடையை நீக்க வேண்டும்" என்றார்.
 
தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்தை  வெளியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றார்.
இந்நிலையில் இருதரப்பு வாதத்தைத் தொடர்ந்து, மாலையில் தீர்ப்பளித்த நீதிபதி,  'விஸ்வரூபம்' படத்தை தாம் 26-ம்தேதி பார்ப்பதாகவும், அதற்குப் பிறகு படத்தை திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா, வேண்டாமா என்ற முடிவுக்கு வரலாம் என்றும் கூறினார். மேலும் ஜனவரி 28ம் தேதி வரை படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் அறிவித்தார்.

புதுச்சேரியில் தடை

இதனிடையே விஸ்வரூபம் படத்திற்கு புதுச்சேரியில் 2 வார காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.