Published:Updated:

ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாக இயக்குநரிடம் 2-வது நாளாக சிபிஐ விசாரணை

சென்னை: ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ஷிலேகாவிடம் இரண்டாவது நாளாக சி.பி.ஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். .

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு (எம்.டி.எஸ்) அங்கீகாரம் பெறுவதற்காக இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கவுன்சிலின் உறுப்பினரான டாக்டர் முருகேசன் மற்றும் ஆதிபராசக்தி கல்லூரியின் நிர்வாகிகள் உள்பட 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீலேகாவை சி.பி.ஐ. அதிகாரிகள் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீலேகா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எம். எம். சுந்தரேஷ் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஸ்ரீலேகாவுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சி.பி.ஐ. விசாரணைக்காக, சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய இரு நாள்களும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை மனுதாரர் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி ஸ்ரீலேகா, நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் காலை தொடங்கி மாலை வரை விசாரணை செய்தனர்.

ஷிலேகாவிடம் இரண்டாவது நாளாக இன்றும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரனை நடத்துகின்றனர் இதில் அந்த பல் மருத்துவப் படிப்பு தொடங்க அனுமதி பெற யாரெல்லாம் லஞ்சம் கேட்டனர், யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் திரட்டப்பட்டதாகத் தெரிகிறது.இந்த வழக்குத் தொடர்பாக மேலும் சிலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டு வருகின்றனர்.