Published:Updated:

பொருளாதார மோசடி செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம் - அமலுக்கு வந்தது அவசரச் சட்டம்

சத்யா கோபாலன்
பொருளாதார  மோசடி செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம் - அமலுக்கு வந்தது அவசரச் சட்டம்
பொருளாதார மோசடி செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம் - அமலுக்கு வந்தது அவசரச் சட்டம்

வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என்ற அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் சில
காலங்களாக எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான மசோதா கடந்த மார்ச் 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவிவந்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. 

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பின்னர் இது குடியரசுத் தலைவர் ராம் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார், இதனால் இந்த அவசரச் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின்படி மோசடி செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் அம்சங்களும் இந்தப் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், நிதி மோசடியில் ஈடுபடுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் மட்டுமே நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும்.

இந்த அவசரச் சட்டம் 6 மாதம் வரை நடைமுறையில் இருக்கும். அதற்குள் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் எனக் கூறப்படுகிறது.