Published:Updated:

தலைமை நீதிபதி ஓய்வுபெறும் வரை உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதில்லை - சூளுரைத்த கபில் சிபல்

சத்யா கோபாலன்
தலைமை நீதிபதி ஓய்வுபெறும் வரை உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதில்லை -  சூளுரைத்த கபில் சிபல்
தலைமை நீதிபதி ஓய்வுபெறும் வரை உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதில்லை - சூளுரைத்த கபில் சிபல்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுபெறும் வரை, நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதில்லை என காங்கிரஸின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி ஓய்வுபெறும் வரை உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதில்லை -  சூளுரைத்த கபில் சிபல்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா மீது கடந்த ஜனவரி மாதம் 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு கூறினார்கள். வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது, இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக நடைபெற்றது. இது, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிபதிகளின் குற்றச்சாட்டை அடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்திவந்தனர்.

இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்துவந்தனர். இதைத் தொடர்ந்து, தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள், மாநிலங்களவைத் தலைவரும், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவிடம் நோட்டீஸ் வழங்கினர். இதைப் பரிசீலனைசெய்த அவர், நோட்டீஸை நிராகரித்தார். தீபக் மிஸ்ராவின் பதவி நீக்கம் தொடர்பான நோட்டீஸை வெங்கைய நாயுடு ஏன் நிராகரித்தார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிவருகின்றன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிர்ப்புகள் வலுத்துவருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல்,  “தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுபெறும் வரை நான் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப் போவதில்லை. இது, எனது தொழிலுக்கு நான் தரும் மரியாதை. தீபக் மிஸ்ரா மீதான விசாரணை தொடர்ந்தாலும், அவரை பதவிநீக்கம் செய்யும் வரை நான் நீதிமன்றம் செல்ல மாட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக் கோரிய நோட்டீஸில், ப.சிதம்பரம் உள்ளிட்ட சில தலைவர்கள் கையெழுத்திடவில்லையே என்ற கேள்விக்குப் பதிலளித்த கபில் சிபல், “ ப.சிதம்பரத்தை கையெழுத்திடும்படி நாங்கள் கூறவில்லை. ஏனெனில், அவர்மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. நானே அவரது சட்ட ஆலோசகராக உள்ளேன்.” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய இந்த முடிவால் ப.சிதம்பரத்துக்குதான் பெரும் இழப்பாக இருக்கும். ஏனெனில், அவர் வழக்குகளில் இனிமேல் நான் ஆஜராக முடியாது”  என்று கூறினார்.