'படித்து பட்டம்பெற்ற இளைஞர்கள் அரசாங்க வேலைக்காக அரசியல்வாதிகள் பின்னால் அலையாமல் சுய தொழில் செய்யுங்கள், இல்லையெனில் கால்நடை துறையில் களமிறங்குங்கள் அல்லது வெற்றிலை கடை தொடங்குங்கள்’ என்று திரிபுரா முதல்வர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுநிகழ்ச்சிகளில் எதையாவது பேசி விமர்சன வலையத்திற்குள் சிக்கிக் கொள்வது பா.ஜ.வினருக்கு வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் திரிபுரா முதல்வர் பிப்லப் குமாரும் சர்ச்சை கருத்துக் கூறி விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். 'சர்வதேச அழகு சாதனப் பொருள் நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சந்தையை தக்கவைக்க அதிக கவனம் எடுத்துக் கொள்கின்றன. அதற்காகவே இந்தியாவில் இருந்து ஐந்து பேரை உலக அழகி பட்டத்துக்கு தேர்வு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இந்த நிலையில், நேற்று திரிபுரா கால்நடை கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், 'படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசாங்க வேலைக்காகக் காத்திருக்காதீர்கள். அரசு வேலை வேண்டும் என்று அரசியல்வாதிகள் பின்னால் அலையாதீர்கள். சுய தொழில் தொடங்க முயற்சி செய்யுங்கள். வங்கியில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் ஏழுபது ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்று, கால்நடை தொழிலில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். இருபத்து ஐந்தாயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும். இல்லையெனில்,வெற்றிலை கடை தொடங்குங்கள்' என்று இளைஞர்களுக்கு யோசனை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள்., மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஆட்சி பணிக்கு சரிவரமாட்டார்கள். சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்களால்தான் சமூகத்தை கட்டமைக்கத் தெரியும், அவர்களுக்குத்தான் சமூகத்தை கட்டமைக்கும் அறிவு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.