Published:Updated:

களங்கம் துடைக்க கண்துடைப்பு பிரஸ் மீட்!

களங்கம் துடைக்க கண்துடைப்பு பிரஸ் மீட்!
பிரீமியம் ஸ்டோரி
News
களங்கம் துடைக்க கண்துடைப்பு பிரஸ் மீட்!

களங்கம் துடைக்க கண்துடைப்பு பிரஸ் மீட்!

‘‘அப்போலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி, ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒளிவுமறைவும் இல்லை’ என பலமுறைக் கூறியபோதும், மக்கள் மனதில் ஏற்பட்டிருந்த சந்தேகத்தை அகற்ற முடியவில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்புக்கும் அவருடைய மரணத்துக்கும் சசிகலாவை சந்தேகப்படும் எண்ணம்தான் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ‘சசிகலாவுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு இருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணம். அதனால் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்து விடுங்கள்’ என டெல்லி சட்டத்துறை வட்டாரத்திலிருந்து அட்வைஸ் செய்திருக்கிறார்கள். சசிகலா முதல்வர் பதவி ஏற்பதற்குமுன்பு, இந்தக் களங்கத்தைத் துடைக்கவே லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெலை வரவழைத்து பிரஸ் மீட்டில் விரிவாகப் பேச வைத்திருக்கிறார்கள்’’ என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

களங்கம் துடைக்க கண்துடைப்பு பிரஸ் மீட்!

கடந்த 6-ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவக் குழு விரிவாக விளக்கியது. இந்த நிலையில், நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், “ ‘மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஓ.பன்னீர்செல்வம் இயங்குகிறார்’ என்பதை நிரூபிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தன. ஆந்திர முதல்வரிடம் பேசி தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தந்தது; ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்தது போன்ற நிகழ்வுகளில் சசிகலா முன்னிறுத்தப்படவில்லை. இது தவிர, சசிகலாவின் கோபத்துக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன” என விவரித்தவர் தொடர்ந்து, “ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் சசிகலாவுக்கு கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்தன. எனவே, ‘அப்போலோ மருத்துவமனையிலிருந்து விவரங்களை வாங்கி, தமிழக அரசு சார்பில் ஒரு விளக்க அறிக்கை கொடுங்கள்’ என ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரோ அப்படி ஒரு அறிக்கையைத் தரத் தயாராகவே இல்லை. இடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாகப் போடப்பட்ட வழக்கும், அப்போது நீதிபதி சொன்ன கருத்தும், அவர் அறிக்கை கேட்டதும் நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விட்டது” என்றார் விரிவாக.

“ ‘அம்மாவுக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது’ என்ற விவரம் எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவரது உடல்நிலையைப் பற்றி மோடியும் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். ஆனாலும் ‘முதல்வர் மரணத்தில் மர்மம்’ என கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்கள் கொடுக்கும் மனுவை உள்துறை அமைச்சர் வாங்கிக்கொள்கிறார். நாம் சொல்வதைக் கேட்டு அறிக்கை தர மறுக்கிறார் பன்னீர்செல்வம். அப்போலோ சார்பில் சொல்வதையும் மீடியாக்கள் நம்பவில்லை. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தபிறகே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டியதன் அவசியத்தை பிரதாப் ரெட்டி தரப்பிடம் வலியுறுத்தினார் சசிகலா. இதையடுத்தே தமிழக அரசின் சார்பில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது” என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

அதன்படியே கடந்த 6-ம் தேதி மருத்துவர் ரிச்சர்ட் பியெல், டாக்டர்கள் பாபு கே. ஆபிரஹாம், பாலாஜி, சுதா சேஷய்யன் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். ரிச்சர்ட் பேசியபோது, ‘‘முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோரிடம் விளக்கினோம். முதல்வர் சிகிச்சைப் பெற்ற அறையின் கண்ணாடி வழியாக ஆளுநர் அவரைப் பார்த்தார். என்ன சிகிச்சை வழங்குகிறோம் என்பது குறித்தும் ஆளுநருக்கு விளக்கினோம். முதல்வர் ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை. அவருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்படவில்லை. எங்களிடம் அவர் சைகையால் பேசினார். அவர் அனுமதிக்கப் பட்டிருந்த அறையில், சில அடி தூரம் நடந்தார். அவருடைய கையில் வீக்கம் இருந்ததால்தான், கைரேகை வைத்தார். எதிர்பாராதபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால்தான் சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

ஜெயலலிதாவால் பேச முடிந்தது. ஆனால், அவரால் தெளிவாகப் பேசமுடியவில்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். அவருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியமும் ஏற்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் குடும்பத்தைப் பற்றி ஜெயலலிதா அக்கறையோடு விசாரித்தார். அவரிடம் நான் நேரடியாகப் பேசினேன். பிசியோதெரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா ஒத்துழைத்தார். சசிகலாவைத் தவிர ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரிடம் பேசினர். உயர் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை லண்டனுக்கு அழைத்துச்செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், உலகத்தரமான சிகிச்சை அப்போலோவில் இருந்ததால் லண்டன் செல்லும் முடிவை எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர்கள் இருந்தனர்’’ என விரிவாக விளக்கினார்.

பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த அதேநேரத்தில், கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாக அப்போலோவில் உள்ள எல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ம.நடராசன். ‘உளவு பார்ப்பதற்காகத்தான் மருத்துவமனையில் சேர்ந்தார்’ எனக் கொதித்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. அ.தி.மு.க-வில் நடக்கும் அரசியல் காட்சிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.

- ஆ.விஜயானந்த்
படம்: கே.ஜெரோம்