Published:Updated:

டாய்லெட்களில் வைஃபை ஓ.கே... கதவுகள் எங்கே..? கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டாய்லெட்களில் வைஃபை ஓ.கே... கதவுகள் எங்கே..? கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்!
டாய்லெட்களில் வைஃபை ஓ.கே... கதவுகள் எங்கே..? கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்!

கோவையின் மையப்பகுதியில் இருக்கிறது கோட்டைமேடு என்ற பகுதி. இங்கு 60 கழிவறைகள் இடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதேபோல, அவிநாசி மேம்பாலம் அருகே சி.எம்.சி காலனி என்ற பெயரில் துப்பரவுப் பணியாளர்களின்  குடியிருப்பு இருக்கிறது. 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்த  பகுதியில் 4 பொதுக்கழிப்பிடங்கள்தான் இருக்கின்றன. கழிப்பறைகளுக்கு கதவுகள் கூட இல்லாத  அவலம்தான் அங்கு நிலவுகின்றது.   சித்தாப்புதூர் தனலட்சுமி நகரில் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு 10 பொதுப் கழிவறைகள் இருக்கின்றன. இப்படி, கோவையில் ஏராளமான பகுதிகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லாமல் இருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவையின் மையப்பகுதியில் இருக்கிறது கோட்டைமேடு பகுதி. இங்கு 60 கழிவறைகள் இடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவற்றுக்கு மாற்றாகக் கட்டப்பட்டுவரும் கழிவறைப் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை.

கோவையின் மற்றொரு மையப்பகுதியான தடாகம் சாலை முத்தண்ணன் குளக்கரையையொட்டி, சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நான்கு பொதுக்கழிவறைகள் மட்டுமே இருக்கின்றன. அதேபோல, அவிநாசி மேம்பாலம் அருகே சி.எம்.சி. காலனி என்ற பெயரில் துப்பரவுப் பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள பகுதியில் நான்கு பொதுக்கழிப்பிடங்கள்தாம் இருக்கின்றன. தவிர, அந்தக் கழிப்பறைகளுக்குக் கதவுகள்கூட இல்லாத அவலம் நீடிக்கிறது.  

சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பத்து பொதுக்கழிவறைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படி, கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான பகுதிகளில் வசிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப போதிய எண்ணிக்கையிலான கழிவறைகள் இல்லாமல் இருக்கின்றன. இந்நிலையில் `ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பில் அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகே ஸ்மார்ட் டாய்லெட்டை திறந்துள்ளது கோவை மாநகராட்சி. வைஃபை, நவீன குளியலறை மற்றும் கழிவறை, துணி மாற்றும் அறை ஆகியவை இதன் ஸ்பெஷல். கோவையில் பெரும்பாலான குடிசைப் பகுதிகளில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் காலைக்கடனை முடிப்பதற்கே தினந்தோறும் போராடிவரும் நிலையில், அதற்கான வசதிகளைச் செய்துதராமல் `வைஃபை வசதியுடன் ஸ்மார்ட் கழிவறை' அவசியமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

``ரயில் நிலையங்கள் உட்பட பெரும்பாலான பொது வைஃபை இணைப்புகளைப் பயன்படுத்தி, உபயோகமான தகவல்களைத் தெரிந்து கொள்வதைவிடவும், தேவையற்ற விஷயங்களையும், படங்களையும் பார்ப்பவர்களே அதிகம். அப்படியிருக்கும்போது கழிவறையில் எதற்கு வைஃபை என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவையில் அதிக மக்கள் கூடும், தேவை அதிகம் உள்ள காந்திபுரம் அருகே இந்தக் கழிவறையை அமைத்துள்ளோம் என்று மாநகராட்சித் தரப்பில் கூறினாலும், பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் அமைக்கப்பட்டுள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ள ஏராளமான பொதுக் கழிவறைகள் போதிய பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. அவற்றை முறையாகப் பராமரித்தாலே அதிக எண்ணிக்கையிலானோர் பயனடைவார்கள். மேலும் தற்போது ஸ்மார்ட் கழிவறை திறக்கப்பட்டிருப்பது, அரசு மகளிர் பாலிடெக்னிக் அமைந்துள்ள பாலசுந்தரம் சாலையில்தான். அருகில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்திலும் கழிவறைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது, யாருக்காக இந்த ஸ்மார்ட் கழிவறை திறக்கப்பட்டுள்ளது" என்று வெடிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

``இங்க 63 கழிவறைகளை இடிச்சு ரெண்டு வருஷம் ஆகுது. எவ்வளவோ போராட்டங்களுக்கு அப்புறம், போன வருஷம் கழிவறைகள் கட்ட ஆரம்பிச்சாங்க. 15 கழிவறைகள்தாம் கட்டியிருக்காங்க. `மீதிக் கழிவறைகள மார்ச் மாசத்துக்குள்ள கட்டி முடிச்சுருவோம்னு' எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் சொன்னாரு. ஆனா, இப்போ ஜூலை மாசம் ஆகிடுச்சு. இன்னும், அந்தப் பணிகள் முடியவில்லை. கழிவறைகள் இல்லாம, தினமும் நாங்க சந்திக்கற சங்கடங்களை வெளியவே சொல்ல முடியாது" என்று தங்களது வேதனையைப் பகிர்கின்றனர் கோட்டைமேடு பகுதி மக்கள்.

சமூக நீதிக் கட்சித் தலைவரும், வழக்கறிருமான பன்னீர்செல்வம், ``பொது இடங்களில் கழிவறை கட்டுவது அவசியம்தான். ஆனால், அது மக்கள் நெருக்கடி அதிகம் இருக்கும் பகுதிகளில் கட்டப்படவேண்டும். இந்த ஸ்மார்ட் டாய்லெட் அமைந்திருக்கும் பகுதியில், கழிவறைக்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நகரின் ஏராளமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொதுக்கழிப்பிடத்தை நம்பியே உள்ளன. தினமும் நீண்ட வரிசையில் நின்றுதான் இப்போதும் அவர்கள் காலைக்கடனைக் கழிக்கின்றனர். இதனால் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு உறவினர்களை அழைக்கமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. அங்குதான் பொதுக்கழிப்பிடங்கள் கட்டவேண்டும். அதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் லாபம் சம்பாதிப்பதற்காகத்தான் இதுபோன்ற கட்டடங்களை எழுப்பி வருகின்றனர்" என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனைத் தொடர்பு கொண்டபோது, `` `பொதுக்கழிவறைகளில் கட்டணம் குறைவாக இருப்பதால், அவற்றைப் பராமரிக்க முடியவில்லை' என்று ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். அதற்காகத்தான் இலவசமாக ஸ்மார்ட் கழிவறை கொண்டுவந்துள்ளோம். வெளியூர்களிலிருந்து வருவோர்களுக்கு வசதியாக இருப்பதற்காகத்தான் குளியலறை, துணிமாற்றும் அறை ஆகியவற்றுடன் இதை அமைத்துள்ளோம். தனியார்தான் இதைப் பராமரிக்க உள்ளனர். அவர்கள்தாம் வைஃபை வசதியையும் அமைக்க உள்ளனர். வெளியூர்களிலிருந்து வருவோர் அடுத்து எங்கு செல்வது என்பதைத் திட்டமிடுவதற்காகத்தான், வைஃபை வசதி. இதில், வேறு எந்தத் தளத்துக்கும் செல்ல முடியாது" என்றார்.

நகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இதுபோன்ற ஸ்மார்ட் கழிவறைகள் அமைப்பதால் அது ஸ்மார்ட் சிட்டி ஆகிவிடாது. மக்களின் அடிப்படை பிரச்னைகளைச் சரிசெய்துவிட்டு, இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவருவதுதான் உண்மையான ஸ்மார்ட் சிட்டி என்பதை கோவை மாநகராட்சி நிர்வாகம் உணரவேண்டும். உணர்வார்களா...?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு