Published:Updated:

குப்பையை அள்ள ஹெலிகாப்டர்!: பல்லடம் நகராட்சி சாதனை!

 குப்பையை அள்ள ஹெலிகாப்டர்!: பல்லடம் நகராட்சி சாதனை!
குப்பையை அள்ள ஹெலிகாப்டர்!: பல்லடம் நகராட்சி சாதனை!

பல்லடம்: பல்வேறு நூதன ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் பல்லடம் அண்ணாதுரை,  நாளை பல்லடம் நகராட்சியை கண்டித்து ஹெலிகாப்டரை பறக்கவிட்டு ஊர்வலம், போராட்டம் நடத்த இருக்கிறார். என்ன ஆச்சர்யமாக இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே...

 குப்பையை அள்ள ஹெலிகாப்டர்!: பல்லடம் நகராட்சி சாதனை!
 குப்பையை அள்ள ஹெலிகாப்டர்!: பல்லடம் நகராட்சி சாதனை!

கடந்த தி.மு.க. ஆட்சியில் பல்லடம் நகராட்சி சார்பில் குப்பைகளைக் கொட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஐந்தரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சி முடிந்தும்... தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இவ்வளவு காலம் கடந்தும் அந்த இடம் குப்பைக் கொட்ட முடியாமல் படுசுத்தத்தில் இருக்கிறதாம். காரணம், பாதை இருந்தால்தானே அந்தப் பகுதிக்கு போக முடியும்; குப்பைகளைக் கொட்ட முடியும். சுமார் ஏழரை லட்சம் மதிப்பில் வாங்கிய இந்த நிலத்தில், பாதை இல்லாத ‘ஏழரை’ பிரச்னை இருப்பது தெரியாமல் வாங்கினார்களா? தெரிந்தே வாங்கினார்களா என்பது அந்த அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

இந்த நிலையில்தான் ஹெலிகாப்டரை பறக்க விட்டு ஊர்வலம் நடத்தவிருக்கிறார் பாரத் மக்கள் கட்சியின்

 குப்பையை அள்ள ஹெலிகாப்டர்!: பல்லடம் நகராட்சி சாதனை!

பொதுச் செயலாளரான நூதன போராட்ட புகழ் அண்ணாதுரை. அவரிடம் பேசினோம்.

‘‘அந்த நிலத்துக்கு பாதை இல்லாத ‘பஞ்சாயத்து’ இருப்பது தெரிந்தேதான் அன்றைய அதிகாரிகள் இடத்தை வாங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் கணிசமான தொகை ஊழல் நடந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இங்கு குப்பையைக் கொட்ட இடம் இல்லாததால் ஊர் எங்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கொஞ்சம் கேப் கிடைத்தாலும் குப்பையை கொட்டிவிடுகிறார்கள் நகராட்சி ஊழியர்கள்.

அந்த இடத்துக்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால் பல்லடம் நகராட்சிக்கு ஹெலிகாப்டர் வாங்கித்தர வேண்டும். அந்த ஹெலிகாப்டரில் குப்பையை அள்ளி அந்த இடத்துக்கு சென்று கொட்ட வேண்டும். இந்தப் பிரச்னையால் ஊர் எங்கும் குப்பைக்கூளங்களாக இருக்கிறது. கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளிலும் குப்பையைக் கொட்டிவிடுவதால் நிலத்தடி நீரும் கெட்டுவிட்டது. மேற்கண்ட ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இத்தானை காலமாக இந்த பிரச்னையால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையையும் அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை தீர்க்கக் கோரியும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாளை (24.3.13) அன்று பல்லடத்தில் தெருத்தெருவாக ரிமோட் ஹெலிகாப்டர் (உஸ்ஸ்... அதானே பார்த்தோம்!) பறக்க விட்டு அதன் பின்னாலேயே ஊர்வலம் போகப்போகிறேன். ஏராளமான மக்கள் என் பின்னால் அணி திரள்வார்கள்...’’ என்றார் ஆவேசமாக!

ஏற்கெனவே அண்ணாதுரை நடத்திய நூதனப் போராட்டங்களில் சில...


* பல்லடத்தில் ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டித்து அந்தக் குழிகளில் தென்னங்கன்றுகளை நட்டார்.


* நடிகை சினேகா திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செருப்பு அணிந்து வலம் வந்ததைக் கண்டித்து அவருக்கு செருப்பு பார்சலை அனுப்பினார்.


* தெலுங்கு படம் ஒன்றில் நயன்தாரா சீதையாக நடிக்க... கொதித்துப்போன அண்ணாதுரை நயன்தாராவுக்கு கூரியரில் சேலைகளை பார்சல் அனுப்பினார்.


* இந்தியா & இலங்கை கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோது இலங்கை அணியினர் இங்கு விளையாடக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்லடத்தில் ஆடு, மாடுகளுடன் இவரும் இவரது கட்சியினரும் கிரிக்கெட் விளையாடினர்.


* பல்லடம் நான்கு ரோட்டில் குடிநீர் பைப் உடைந்து அந்த இடத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கியிருந்தது. பலமுறை புகார் கொடுத்தும் சரி செய்யப்படாததால் தேங்கிய தண்ணீரில் மீன் வளர்த்து போராட்டம் நடத்தினார்.


அண்ணாதுரை இவ்வளவு ரவுசு வகையறா போராட்டங்களை நடத்தியபோதும் மக்களிடமும் செல்வாக்கைப் பெற்றுள்ளார். காரணம், ஒவ்வொரு முறையும் இவரது போராட்டத்துக்கு பின்பும் அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுத்துவிடுவதுதான்!

படம் & செய்தி:  ஜி.பழனிச்சாமி