Published:Updated:

குறி சொன்னவருக்கே குண்டு வைத்த பலே திருடன்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: வழக்கமாக குறி சொலும் பூசாரிகள் தான் அதை இதை சொல்லி சீட்டிங் போட்டுவிட்டதாக புகார்கள் வெடிக்கும். ஆனால்,  ஸ்ரீவில்லிப்புத்தூரில் குறி சொல்லும் பூசாரிக்கே குண்டு வைத்துவிட்டுப் போயிருக்கிறான் ஒரு கில்லாடி திருடன்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியை சேர்ந்த பிரபல குறி சொல்லும் ஜோதிடர் கருப்பசாமி. நல்லதாய் நாலு வார்த்தை சொல்லுவார் என்பதால் இவரிடம் ஜாதகம் மற்றும் குறி பார்க்க எப்போதும் கூட்டம் இருக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் ஆள் வரத்து கம்மி. இதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு பல்சர் பைக்கில் வந்து இறங்கி இருக்கிறான் ஒரு டிப் டாப் ஆசாமி. மதிய சாப்பாட்டு நேரம் என்பதால் அக்கம் பக்கத்திலும் யாரும் இல்லை.

பல்சர் பார்ட்டியிடம் , 'உனக்கு என்னப்பா பிரச்னை?' என்று கருப்பசாமி கரிசனமாய் கேட்க, 'சாமி.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆக‌ல, எனக்கு பாக்குற பொண்ண எல்லாம் எவனாச்சும் கட்டிக்கிட்டு போயிடுறான். நமக்கு ஜாதகத்துல ஏதாச்சும் தோஷம் இருக்கா, அதை போக்குறதுக்கு ஏதாச்சும் பரிகாரம் உண்டா?னு பாத்துச் சொல்லுங்க" என்று பவ்யமாய் சொல்லி இருக்கிறான் பல்சர் பார்ட்டி.

அவன் சொன்னதை நம்பி கர்ம சிரத்தையாய் கண்ணை மூடி குறி சொல்ல ஆரம்பித்த‌ கருப்பசாமி, மளமளவென தோஷ பரிகாரங்களை சொல்லி இருக்கிறார். சற்று நேரத்தில் கண்ணைத் திறந்து பார்த்த கருப்பசாமிக்கு தூக்கிவாரிப் போட்டது. எதிரே இருந்த பல்சர் பார்ட்டி, கையில் கத்தியோடு உட்கார்ந்திருந்தான்.

அதற்கு மேல், கருப்பசாமி பேசவில்லை. பல்சர் பார்ட்டி தான் மேற்கொண்டு குறி சொல்ல ஆரம்பித்திருக்கிறான், 'சாமி இப்ப நீங்க என்ன பண்றீங்க... கையில கெடக்குற பிரேஸ்லெட், கழுத்துல கெடக்குற செயினு எல்லாத்தையும் சத்தம் போடாம கழட்டி என் கையில் குடுக்குறீங்க. சத்தம் போட்டீங்கன்னா சங்கு இருக்காது" என்று அவன் சொல்ல, மறுத்துப் பேசாமல் தன்னிடம் இருந்த பத்துப் பவுன் நகைகளையும் கழற்றிக் கொடுத்திருக்கிறார் கருப்பசாமி. அதையும் பவ்யமாகவே வாங்கிக் கொண்டு சிட்டாய் பறந்திருக்கிறான் பல்சர் கில்லாடி.

குறி சொல்றவங்க அப்பப்ப தங்களோட ஜாதகத்தையும் ரீ செக்கப் பண்ணிக்குங்கப்பா!

-எம் கார்த்தி