Published:Updated:

கொள்ளிடம் அணை விவகாரம் - தப்புக் கணக்கு போட்ட முதல்வர்.. சரி செய்ய போராடிய தொழிலாளர்கள்..!

சி.ய.ஆனந்தகுமார்
ப.தினேஷ்குமார்
கொள்ளிடம் அணை விவகாரம் - தப்புக் கணக்கு போட்ட முதல்வர்.. சரி செய்ய போராடிய தொழிலாளர்கள்..!
கொள்ளிடம் அணை விவகாரம் - தப்புக் கணக்கு போட்ட முதல்வர்.. சரி செய்ய போராடிய தொழிலாளர்கள்..!

கடந்த 22-ம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணை உடைந்தது. அடுத்த இரண்டாம் நாள் அணையை நேரில் பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  உடைப்பைச் சரி செய்யும் பணிகள், நான்கு தினங்களில் முடிவடையும் என ஓபன் டாக் கொடுத்துவிட்டுப் போனார். ஆனால் கடந்த 15 நாட்களுக்கும் மேல் அணையின் உடைப்பைச் சரி செய்யப் போராடிய 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முதற்கட்டமாக அணையின் உடைப்பைச் சரி செய்துள்ளனர்.   

அதனையடுத்து, முக்கொம்பு கொள்ளிடம் மேலணை உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் ராசாமணி, திருச்சி எம்.பி ப.குமார் ஆகியோர் முன்னிலையில், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, மண்டல தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் தி.பெ.கணேசன் ஆகியோர் சகிதமாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

“கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாகக் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் சேதமடைந்தன. சேதமடைந்த பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டு ஆழமாக காணப்படுகிறது. காவிரியில் தண்ணீர் செல்வதற்காக கொள்ளிடத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு காவிரியில் திருப்பி விடப்படுகிறது. இதுவரை 700 லாரிகள் மூலம் பாறாங்கற்கள் கொண்டுவரப்பட்டு இரவு, பகல் பாராமல் அடைப்பு சரிசெய்யப்பட்டு வந்தது. கரூர், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பாறாங்கற்கள் கொண்டுவரப்பட்டு உடைப்பைச் சீர்செய்யும் பணி நிறைவு பெறவுள்ளது. பாறாங்கற்களை கொண்டு உடைப்பைச் சீர்செய்யப்பட்டுள்ள இடங்களில் சிறுசிறு துவாரங்களில் தண்ணீர் கசிகிறது. இது முழுவதும் ஒரிரு நாட்களில் கசிவு இல்லாமல் முழுவதுமாக நிறுத்தப்படும்.

தமிழக முதல்வர்  மற்றும்  துணைமுதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்வப்போது பணியின் முன்னேற்றம் குறித்து அறிந்தும், ஆலோசனை கூறியும் வருகிறார்கள். மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை அலுவலர்களும் வேகமாகவும், விரைவாகவும் பணி செய்து உடைப்பைச் சீர்செய்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து முக்கொம்பிற்கு பாறாங்கற்கள் கொண்டு செல்லும் பாதை மிகவும் குறுகலாக உள்ளதால் ஒரு சில நாட்கள் கூடுதலாக தேவைப்பட்டன. காவிரியில் இருந்து விநாடிக்கு 4000 கனஅடியும், கொள்ளிடத்தில் இருந்து 2000 கனஅடியும் தண்ணீர் செல்கிறது. உடைப்பு சரிசெய்யும் பணி நிறைவடைந்துள்ளதை  தமிழக முதல்வருக்கு தெரிவித்துள்ளோம். உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ள கரை இன்னும் பலப்படுத்தப்படும்.

தமிழக முதல்வர் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்டவுடன் கடைமடை வரை தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்படும். உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் அப்பால் புதிய தடுப்பணை கட்ட ரூபாய் 410 கோடி மதிப்பில் கட்டுவதற்கு ஆயத்தப்பணிகளும் நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் மேலணை உடைப்பிற்கு இதுவரை 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. 200 லாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடைப்பு சரிசெய்வதற்கு டாரஸ் லாரி உரிமையாளர்கள் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஆனால் தமிழக அரசு கொள்ளிடம் அணையின் தன்மையையும் ஸ்திரத்தன்மையையும் முன்பே கணிக்கவில்லை என்பது ஒருபக்கம் என்றாலும், அணை உடைந்த பிறகு ஆய்வு செய்த முதல்வர் நான்கு நாட்களில் உடைப்பைச் சரி செய்துவிடுவோம் என சொல்லிவிட்டுப் போனார். ஆனால் கடந்த 15 நாட்களாக கொள்ளிடம் அணையின் உடைப்பைச் சரி செய்ய 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் ராத்திரி பகலாக உழைத்ததின் பலனாய் உடைந்த பகுதி அடைக்கப்பட்டுள்ளது.