Published:Updated:

சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத் தலைவருக்கு கொலை மிரட்டல்! 

சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத் தலைவருக்கு கொலை மிரட்டல்! 
சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத் தலைவருக்கு கொலை மிரட்டல்! 

``புத்தக வெளியீட்டு விழாவில் மாணிக்கவாசகர் பேசியதை மேற்கோள்காட்டி பேசியதற்காக ஹெச்.ராஜாவும், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட  அமைப்புகளும் தொடர்ந்து மிரட்டுவதாகப் புகார் தெரிவித்துள்ளார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் முனைவர் நல்லூர் சரவணன்.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் முனைவர் ஆ.பத்மாவதி எழுதிய, ‘மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும்’ என்கிற நூல்வெளியீட்டு விழா, அண்மையில் நடந்தது. அதில், முனைவர் நல்லூர் சரவணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போன் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய முனைவர் நல்லூர் சரவணன், `` `மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும்' என்ற நூல் வெளியீட்டு விழாவில், ஆரியவேத சமய கருத்துகளுக்கு எதிராக மாணிக்கவாசகர் கூறியதை மேற்கோளாக வைத்து வேதமதத்துக்கும் சைவசமயத்துக்கும் இடையிலான போராட்டம் பற்றிப் பேசினேன். அதற்காக, என்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆளுநரிடமும் பல்கலைக்கழத்திலும் மனு கொடுத்துள்ளனர். அதற்கு உரிய விளக்கம் அளித்துள்ளேன். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா, என்னை,  `ரவுடி' என்று குறிப்பிட்டுப் பேசிவருகிறார். இவர்களின் தூண்டுதலின் பேரில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் எனக்கு எதிராக இன்று (18.9.2018) மாலை போராட்டம் நடத்தப்படுமென இந்து அமைப்பினர் அறிவித்துள்ளனர். நான் முன்வைத்த கருத்துகளுக்கு எதிர்க்கருத்து வைக்காமல், சமூக வலைதளங்களில் அவதூறுகளைச் செய்வதும், நேரிலும், தொலைபேசியிலும் மிரட்டல் விடுப்பதும் என்ன அறம். இதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதுதொடர்பாக  நான் காவல் துறையில் புகார் தெரிவிக்கவிருக்கிறேன்" என்கிறார். 

இதுகுறித்து  இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் கேட்டோம். `மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும்'  என்ற நூலை நல்லூர் சா.சரவணன் என்பவர் தலைவராக உள்ள சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற அமைப்பு பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது தவறானது. சைவ சமயக் குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரையும், சைவ சமயத்தையும் இழிவுபடுத்தும் வகையிலும், சைவ-வைணவ மோதலை உருவாக்கும் சதித்திட்டத்துடனும் இந்நூல் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.  நூற்றாண்டு பழைமை வாய்ந்த சைவ சித்தாந்த பெருமன்றம் கசவ மரபை காக்க, பேணிப்போற்ற உருவாக்கப்பட்டது. சைவப் பெரியோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அமைப்பைத் தற்போதைய தலைவர் நல்லூர் சா.சரவணன் நிதிக்கும், சதிக்கும் பலியாகி தவறிழைத்திருக்கிறார். இந்நூலில் இடம்பெற்றுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல்களை எதிர்த்து, சிவனடியார்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் இந்த நூலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக மயிலை கபாலீஸ்வரர் கோயில், கரூர், திருப்பெருந்துறை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. நல்லூர் சா.சரவணன் மீது உரிய சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஏற்கெனவே இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. சட்டரீதியான நடவடிக்கையை வலியுறுத்தி, நாங்கள் அறவழியில் போராடியும் வருகிறோம்" என்கிறார் அர்ஜூன் சம்பத்.

ஒருபக்கம் இந்து அமைப்புகள் நல்லூர் சரவணன் எதிராகப் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இன்னொரு பக்கம், நாம் தமிழர் கட்சி, அவருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும், சில அமைப்புகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.