Published:Updated:

'3 லோடு மணல் எடுக்க 20 ஆயிரம்' - பேரம் பேசும் காவல் ஆய்வாளர்; வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ

இரா.மோகன்

 ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலைய ஆய்வாளர, மணல் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் ஆடியோ  சமூக வலை தளங்களில் பரவிவரும் நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

'3 லோடு மணல் எடுக்க 20 ஆயிரம்' - பேரம் பேசும் காவல் ஆய்வாளர்; வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ
'3 லோடு மணல் எடுக்க 20 ஆயிரம்' - பேரம் பேசும் காவல் ஆய்வாளர்; வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலைய ஆய்வாளர், மணல் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

கோப்புப் படம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவுக்கு உட்பட்ட தத்தங்குடி கண்மாயில், குடிமராமத்து என்ற பெயரில் பல இடங்களில் மிக ஆழமாகத் தோண்டி,  ஜெ.சி.பி இயந்திரம் மூலமாக முறைகேடாக மணலை எடுத்து விற்பதற்காகக் கொள்ளையடிக்கப்படுவதாக பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரனுக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் பல வந்தன.
இப்புகார்களின் அடிப்படையில், சிக்கல் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கண்ணன் ஆகியோர்மீது குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு, சார் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

மேலும், பரமக்குடி சார் ஆட்சியர் கேட்டுக்கொண்டதன்படி கனிம வளத்துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வுசெய்து, மணல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது உண்மை எனவும் அறிக்கை அளித்திருந்தனர்.
இந்நிலையில், பரமக்குடி சார் ஆட்சியர் ப.விஷ்ணுசந்திரனும் தத்தங்குடி கண்மாயில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பல இடங்களில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ஆய்வுசெய்துகொண்டிருந்தபோதே அப்பகுதியில் மணல் கடத்திய கும்பலால் போடப்பட்டிருந்த குடிசைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனிடையே, சிக்கல் காவல் ஆய்வாளர் முகம்மது நசீர், அதே கண்மாயில் மணல் அள்ளுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்க பணம் கேட்டு கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் ஆடியோ, வாட்ஸ்அப் மூலமாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. 

அந்த ஆடியோவில், சிக்கல் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் மணல் கடத்தல் புரோக்கராகச் செயல்பட்டதும், காவல் ஆய்வாளர் 3 லோடு மணல் எடுக்க 20 ஆயிரம் கேட்பதும் பதிவாகியுள்ளது. மேலும், அந்த புரோக்கரையே மணல் அள்ளும் மற்ற நபர்களைக் கண்காணிக்கச் சொல்வதும், மணல் அள்ளும்போது கவனமாகச் செயல்படுமாறும் காவல் ஆய்வாளர் முகம்மது நசீர் கூறுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. 

சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த மணல் பேர ஆடியோ குறித்து ராமநாதபுரம் எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், ''மணல் கடத்தல் கும்பலுடன் சிக்கல் இன்ஸ்பெக்டர் முகம்மது நசீர் பேசும் ஆடியோ வெளியாகியிருப்பது குறித்து கீழக்கரை டி.எஸ்.பி (பொறுப்பு) நடராஜனிடம் விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறேன். அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை தெரிந்த பின்னர், சிக்கல் காவல் நிலைய ஆய்வாளர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.