Published:Updated:

லஞ்சப் பணத்தில் கிடா விருந்து! - சர்ச்சையில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்

எம்.வடிவேல்
லஞ்சப் பணத்தில் கிடா விருந்து! - சர்ச்சையில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்
லஞ்சப் பணத்தில் கிடா விருந்து! - சர்ச்சையில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் எம்.எம்.செல்வராகவன், கடந்த 23.7.2018 ஆண்டு கெலமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாக வந்து பணியில் சேர்ந்தார். இந்த நிலையில், இன்று கெலமங்கலம் காவல் நிலையத்தில் ஊர் பெரியவர்களை ஸ்டேஷன் வரவழைத்து 3 கிடாவை வெட்டிக் கறி விருந்து பரிமாறிய சம்பவம் பொதுமக்களிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

எதற்காக இந்தக் கறி விருந்து? என்று உள்ளூர் பொது மக்களிடம் விசாரித்தபோது, எஸ்.ஐ செல்வராகவன் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த பிறகு கெலமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி, மணல் கொள்ளை, குடிசைகளில் மது விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்பாடுகள் எஸ்.ஐ செல்வராகவனின் ஆசியுடன் ஜோராக நடைபெற ஆரம்பித்து விட்டது. இதையெல்லாம் கவனித்த உள்ளூர் மக்கள் எஸ்.ஐ செல்வராகவனுக்கு எதிராக நோட்டீஸ் அடித்து ஆர்ப்பாட்டம் செய்யத் தயாரானார்கள். தகவல் அறிந்த எஸ்.ஐ செல்வராகவன், விநாயகர் ஊர்வலம் மிக அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளித்த ஊர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, ஸ்டேசனுக்கு அழைப்பு விடுத்து, ஸ்டேஷன் முன்பாகவே பந்தல் போட்டு பொதுமக்களுக்கு கறி விருந்து பரிமாறியுள்ளார் செல்வராகவன். இந்தக் கிடா விருந்தை ராக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் பரிமாறி தொடங்கி வைத்ததுதான் கூடுதல் அதிர்ச்சி' என்கின்றனர். இந்தக் கிடா விருந்துக்கான செலவு மொத்தமும் கெலமங்கலம் லாட்டரி வியாபாரி சரவணன் ஏற்றுச் செய்துள்ளார். 

கிடா விருந்து குறித்து, எஸ்.ஐ செல்வராகவனிடம் பேசினோம். "கெலமங்கலம் காவல்நிலையப் பகுதியில் இந்து, முஸ்லிம் மக்கள் அதிகளவு வாழ்கின்றனர். விநாயகர் ஊர்வலம், மொகரம் பண்டிகை நடைபெறும்போது சிறு சிறு சலசலப்பு ஏற்படும். இந்த முறை எந்த விதமான சலசலப்பும் இல்லாமல் முடிந்தது. அதனால் பொதுமக்களுக்கு மத நல்லிணக்கத்தை உணர்த்தும் விதமாகச் சைவம் மற்றும் அசைவ உணவு பரிமாறி ஒற்றுமையை ஏற்படுத்தினோம். நான் உதவி ஆய்வாளராக வந்த பிறகு, சமூக விரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன" என்று தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

சமூக விரோதச் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் மாமூல் பணத்தில் பொதுமக்களுக்குப் பங்கு அளிப்பதுபோல நடைபெற்ற கிடா விருந்து சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள், காவலர்கள் இடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.