Published:Updated:

அ.தி.மு.க நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட கலெக்டர்! - கடலூர் சர்ச்சை

ஜி.சதாசிவம்
அ.தி.மு.க நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட  கலெக்டர்! - கடலூர் சர்ச்சை
அ.தி.மு.க நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட கலெக்டர்! - கடலூர் சர்ச்சை

கடலூரில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடந்த தனியார் தொழில் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொழில் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

இந்த முகாம் தமிழக தொழில் துறை அமைச்சரும், அ.தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி சம்பத் தலைமையில் நடந்தது. இன்று காலையில் நடந்த இந்த முகாமில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செழியன் கலந்துகொண்டு பேசியுள்ளார். கட்சி சார்பில் நடந்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து கடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிரவன் கூறியதாவது. `ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டுள்ளார். இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நடத்தும் நிகழ்ச்சியில் கூட மாவட்ட கலெக்டர் கலந்துகொள்ளக் கூடாது, ஆனால், இவர் அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். ஒரு மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக உள்ள ஒருவர் இப்படி அரசியல் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், அவர் எப்படி மாவட்ட மக்களுக்கு நடுநிலையாகப் பணியாற்றுவார் என்பது தெரியவில்லை’ என்றார்.