Published:Updated:

அமைச்சர் விழாவுக்குச் சென்ற கலெக்டர் - அதிகாரிகள் அலட்சியத்தால் காத்திருந்த பொதுமக்கள்!

எம்.வடிவேல்
அமைச்சர் விழாவுக்குச் சென்ற கலெக்டர் - அதிகாரிகள் அலட்சியத்தால் காத்திருந்த பொதுமக்கள்!
அமைச்சர் விழாவுக்குச் சென்ற கலெக்டர் - அதிகாரிகள் அலட்சியத்தால் காத்திருந்த பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள் அன்று பொதுமக்களுக்கான மனுநீதி நாள் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு குக்கிராமங்களில் இருந்து பல கிலோ மீட்டர் பயணத்துக்குப் பிறகு காலை 9 மணிக்கெல்லாம் ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்து சேர்வார்கள். அப்படி வரும் பொதுமக்கள் குடிநீர் பிரச்னை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, மருத்துவ உதவி, கல்வி உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித் தொகை எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனுவாகக் கொடுப்பார்கள்.

ஆனால், இன்று (24.9.2018) காலை 10 மணிக்குத் தொடங்க வேண்டிய மனுநீதி நாள், 11 மணி ஆகியும் தொடங்கவில்லை. இதனால் வயதான பெரியவர்களும், தாய்மார்களும், குழந்தைகளும் காலை முதலே மணிக்கணக்காகக் காத்திருந்தனர். இது குறித்து ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களிடம் விசாரித்தபோது., கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ரேஷன் கடை திறப்பு விழா இருந்ததால் கலெக்டர் பிரபாகரன் அமைச்சருடன் சென்றுவிட்டார். ஆட்சித்தலைவருக்குப் பதிலாக டி.ஆர்.ஒ சாந்தி மனுநீதி நாளை நடத்த வேண்டும்" என்றனர்.

10 மணிக்கு தொடங்க வேண்டிய மனுநீதி நாளை அலுவலகப் பணிகள் காரணம் காட்டி 11 மணி வரை மனுநீதி நாளைத் தொடங்காமல் அலுவலக பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார் டி.ஆர்.ஒ. இதனால் மனுநீதி நாள் என்று நினைத்து வந்த வயதான பெரியவர்களும், பெண்களும், குழந்தைகளும் சோர்ந்துபோய் ஆட்சியர் அலுவலகத்திலேயே அமர்ந்துவிட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் கூட்டம் கூடிவிட்டதால், தகவல் அறிந்து காலை 11 மணிக்குப் பிறகு டி.ஆர்.ஒ சாந்தி அதிகாரிகளை அழைத்து மனுநீதி நாளை நடத்தினார். மக்களுக்கான மனுநீதி நாளில் இவ்வளவு அலட்சியமா... மாவட்ட நிர்வாகம் இனியாவது கவனம் செலுத்துமா...?