Published:Updated:

'2ஜி... மார்ச் 31-க்கு முன்பாக கனிமொழியிடம் சிபிஐ விசாரணை'

புதுடெல்லி, மார்ச் 10,2011

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினரும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் இம்மாதம் 31-ம் தேதிக்கு முன்பாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளதாக அதன் வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன. ##~~##

"கனிமொழியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம். மார்ச் 31-க்கு முன்பாக விசாரிக்கப்படுவார்," என்று மூத்த சிபிஐ அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்றதாக மும்பையைச் சேர்ந்த ஸ்வான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால்வா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், கலைஞர் டி.வி.க்கு ஸ்வான் நிறுவனம் ரூ.214 கோடி கொடுத்ததாகத் தெரியவந்தது.

அதேவேளையில், சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப்பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப் பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று கலைஞர் டிவி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார் இரண்டு முறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஸ்வான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது தொடர்பாக, அதன் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் கனிமொழியிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மார்ச் 31-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும், இந்த விசாரணை முழுமையடைவதற்கும் கனிமொழியை விசாரிப்பது அவசியம் என சிபிஐ தரப்பு தெரிவிக்கிறது.

இதனிடையே, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு சிபிஐ ஏற்கெனவே சம்மன் அனுப்பிவிட்டதாகவும், அவரை இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, சென்னையில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு