Published:Updated:

காசு கொடுத்தும் பரிசும், உணவும் கிடைக்காததால் ரகளை!

விகடன் விமர்சனக்குழு
காசு கொடுத்தும் பரிசும், உணவும் கிடைக்காததால் ரகளை!
காசு கொடுத்தும் பரிசும், உணவும் கிடைக்காததால் ரகளை!

திருவண்ணாமலை: ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் கொடுத்த டோக்கனை காசு கொடுத்து வாங்கியவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பரிசும், உணவும் கிடைக்காததால் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த டிரீம் லேண்ட் ஃபவுண்டேஷன் நிறுவனத்தினர், தங்கள் கிளைகளை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், அவனியாபுரம் மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஊரிலும் மனைகள் வாங்கி விற்பனை செய்வது வழக்கம். இதற்காக பொது மக்களை கவரும் வகையில் முதல் கட்டமாக அந்தந்த ஊர்களில் சில புரோக்கர்களை ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் பொதுமக்களிடம் தாங்கள் விற்பனை செய்யவுள்ள மனைப்பிரிவு பற்றி சொல்லி வாடிக்கையாளர்களை சேர்ப்பது வழக்கம்.

அதேபோல் கடந்த 14ஆம் தேதி திருவண்ணாமலை சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள், திருக்கோவிலூரை சேர்ந்தவர்களிடம் 500 ரூபாய் வீதம் 3,000 பேரிடம் வசூல் செய்துள்ளனர். அவர்களுக்கு அந்த 500 ரூபாய்க்கு பரிசு பொருட்கள் கொடுக்கப்படும் என்றும், அதில் 150 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

##~~##
இதற்கான குலுக்கலை பாண்டிச்சேரி அருகில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கேயே எல்லோருக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அங்கே சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்துவிட்டனர். இதனால் அந்த நிறுவனத்தார் திக்குமுக்காடிவிட்டனர். இதனால் பாதி பேருக்கு உணவும், தாங்கள் எதிர்பார்த்து வந்த பரிசு பொருட்களும் கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்தவர்களுக்கும், நிறுவனத்தினத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை போயிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த இடமே ஒரு போர்க்களம் போல் ஆகிவிட்டது.
இதனால் பணம் கொடுத்தவர்கள் பலரும் ஏமாற்றத்துடன் அவரவர் ஊர்களுக்கு திரும்பி வந்துவிட்டனர். இதில் ஏமாற்றம் அடைந்தவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க இருந்தனர். இதை அறிந்த அந்த நிறுவனத்தார் பணத்தை திருப்பி தருவதாக கூறி சமாதானம் செய்துவிட்டனர். இந்த நிறுவனத்தார் அச்சடித்து கொடுத்திருந்த டோக்கன் போலவே, வேறு யாரோ அச்சடித்து விநியோகம் செய்து காசு பார்த்திருப்பதே இத்தனை பிரச்னைக்கும் காரணம் என்கின்றனர் அந்த நிறுவனத்தார்.

கோ.செந்தில்குமார்