Published:Updated:

மாவுக்குப் போகும் ரேஷன் அரிசி-மதுரையில் சிக்கியது கடத்தல் கும்பல்

விகடன் விமர்சனக்குழு
மாவுக்குப் போகும் ரேஷன் அரிசி-மதுரையில் சிக்கியது கடத்தல் கும்பல்
மாவுக்குப் போகும் ரேஷன் அரிசி-மதுரையில் சிக்கியது கடத்தல் கும்பல்

மதுரை: தொடர்கதையாகி வரும் ரேஷன் அரிசி கடத்தலில், புதியதொரு உத்தியாக, பாக்கெட்டுகளில் அடைத்தும், மாவாக்கியும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தங்கம் விலைகூட குறைந்துவிட்டது, ஆனால், அரிசி விலை குறைந்தபாடில்லை. இட்லி அரிசியே கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை கடத்தி கள்ள மார்க்கெட்டில் விற்கும் செயல் தொடர் கதையாகி வருகிறது.

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள ஒரு லாரி செட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து 24 மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக லட்சுமணன் என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ், அந்த அரிசியை கொடைக்கானலைச் சேர்ந்த அசன் என்பவருக்கு அனுப்புவதற்காக கொடுத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லட்சுமணன், அசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ரமேஷை தேடி வருகிறார்கள்.

##~~##
இதேபோல வில்லாபுரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மினி லாரியை நிறுத்தி போலீஸார் சோதனையிட்ட போது, அதில் 20 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அதை கடத்தியதாக முத்து என்பவரை கைது செய்தனர். இதேபோல திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னான் என்பவரது வீட்டில் 19 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றிய போலீஸார், சின்னான், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இதுபற்றி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகனிடம் கேட்டபோது, "முன்பு லாரிகளில் ரேஷன் அரிசியை கடத்துவார்கள். ஆனால் இப்போது சிறு சிறு சிப்பங்களாகவும், பாக்கெட்டுகளாகவும் அடைத்து லாரி புக்கிங் ஆபீஸ் மூலம் கடத்துகிறார்கள். ஆனாலும் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரேஷன் அரிசியை அப்படியே விற்றால் மாட்டிக் கொள்வோம் என்று சிலர் மாவாக்கி விற்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரித்து வருகிறோம்" என்றார்.
கே.கே.மகேஷ்