Published:Updated:

#MeToo புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா... சட்டம் என்ன சொல்கிறது?

#MeToo புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா... சட்டம் என்ன சொல்கிறது?

#MeToo புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா... சட்டம் என்ன சொல்கிறது?

#MeToo புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா... சட்டம் என்ன சொல்கிறது?

#MeToo புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா... சட்டம் என்ன சொல்கிறது?

Published:Updated:
#MeToo புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா... சட்டம் என்ன சொல்கிறது?

பிரபலங்களின் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய குற்றங்களை இழைத்தவர்கள் மீது ஆதாரங்கள் இல்லாமல் புகார் அளிக்க முடியும். ஆனால், பல ஆண்டுகள் கடந்து, ஒரு குற்றச் செயலுக்குப் புகார் அளிப்பது சற்றே சிக்கலான விஷயம் என்று விளக்கமளிக்கிறார் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன். வழக்கு குறித்த விவரத்தைப் பார்ப்பதற்கு முன்பாக `#MeToo..' குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அமெரிக்காவில் உருவான `#MeToo' புயல், தற்போது தமிழ்நாட்டில் மையம் கொண்டுள்ளது என்றே கூற வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, `#MeToo' புகார், சினிமா வட்டாரத்தைத் தாண்டி அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டுச் சில நாள்களாகச் சலனமில்லாமல் இருக்கிறது. 

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்க நடிகை அலைஸா மிலானோ (Alyssa Milano), தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சமூக வலைதளத்தில் #MeToo என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பதிவிட்டார். அன்றைய தினமே, #MeToo ஹேஷ்டேக்கின் கீழ், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அவரவர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களைப் பதிவிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால் `#MeToo' விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவரை சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த பலரும், வழிகாட்டியாக (role model) இருந்த பலரும் அவர்களின் சுயமுகங்கள் வெளிப்பட்டதால் அவமானத்தால் தலை குனிய நேரிட்டது.  

உலக நாடுகளைக் கலங்கடித்த `#MeToo' இயக்கம், கடந்த மாதம் இந்தியாவையும் அதிரவைத்தது. இந்தியாவின் மிகச் சிறந்த நடிகராகவும் மிகச் சிறந்த மனிதராகவும் அறியப்படும் நானா படேகர் மீது அக்டோபர் 25-ம் தேதி பாலிவுட் நடிகை தனுஶ்ரீ தத்தா குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து இந்தித் திரையுலகின் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் மீது `#MeToo' புகார்கள் அடுத்தடுத்து கிளம்பின. பாலிவுட் திரை உலகைத் தாண்டி, ஊடகத்துறையில் இருந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. அதில், உச்சபட்சமாக, பத்திரிகையாளராக இருந்து மத்திய அமைச்சரான எம்.ஜே.அக்பர் மீதும் பாலியல் புகார் எழுந்தது. பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். `என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன்' என்று அவர் தெரிவித்தார். அதேபோல, நானா படேகரும், `தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது' என்றார். தனுஶ்ரீ தத்தாவின் புகாரைத் தொடர்ந்து நானே படேகர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாலிவுட்டில் சுழன்று கொண்டிருந்த `#MeToo', பின்னணிப் பாடகி சின்மயி மூலம் தமிழ்த் திரையுலகில் மையம் கொண்டது. `10 ஆண்டுகளுக்கு முன்பு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, தனக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்தார்' என்று சின்மயி குற்றம்சாட்டினார். அவருடைய புகாருக்கு அரசியல் களத்திலிருந்து எதிர்வினைகள் வந்தன. அரசியல் தளங்களில் முக்கியச் செயற்பாட்டாளர்கள், வைரமுத்துவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதும் சமூக வலைதளங்களில் பலரும் சின்மயிக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததும் பலரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக அமைந்தது. வைரமுத்து, மீது மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினியும் புகார் எழுப்பினார். அதனையடுத்து, சமீபத்தில் எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்தார். லீனா மணிமேகலையின் புகாருக்கு சுசி கணேசனின் மறுப்புப் பதிவு மிகவும் காட்டமாக இருந்த நிலையில், அந்த விவகாரம் ஊடகங்களின் கவனத்தைத் தூண்டியது. அதனால், இருவரும் ஊடகங்கள் முன்பு தங்கள் தரப்பு நியாயத்தை விளக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். `லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்ததால் சுசி கணேசன் தரப்பிலிருந்து மிரட்டல் வந்தது' என்று சித்தார்த் கூறவும் இந்த விவகாரம் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.  

`#MeToo'வின் கீழ் எழும் அனைத்துப் புகார்களிலும் இரண்டு காரணிகள் பொதுவானதாக இருக்கின்றன. ஒன்று, எழுப்பப்படும் புகார்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. மற்றொன்று அந்தப் புகார்கள், பொதுத் தளங்களில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளாகவே நின்றுவிடுகின்றன. இந்தப் புகார்களில் நிறைய விஷயங்கள் பொதுத் தன்மைகளைக் கொண்டிருக்கும்போது, இந்த இரண்டு காரணங்களை மட்டும் பொதுத் தன்மைகளாக தேர்ந்தெடுப்பதற்கு காரணம், இந்த இரண்டு காரணிகளும்தாம் குற்றம் செய்தவர்களை, தண்டிக்கும் நிலைக்கு எடுத்துச் செல்லும் அம்சங்களைக் கொண்டவை. 

"`#MeToo' இயக்கத்தின் கீழ் எழும் குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? அதில் உள்ள சட்ட நடைமுறைகள் என்ன?" என்பது குறித்து அறிந்துகொள்ள வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம்.

அவர், ``பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து நீண்ட காலம் ஆகிவிட்டது என்பது சிக்கலான ஒரு விஷயம். பொதுவாகவே, எந்த ஒரு குற்றச்செயல் நடந்தாலும் அதுகுறித்து உடனே புகார் செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

இந்த விவகாரங்கள், நீதிமன்றங்களுக்குச் செல்லும் நிலையில், அதனை நீதிமன்றம் எப்படி எடுத்துக் கொள்ளுமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. ஆனால், ஒரு நபர் நீண்ட காலமாக தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை அளிக்கும்போது, அது தொடர்பாக புகார் அளிக்கலாம். தற்போது, நானா படேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது, எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; அந்த வழக்கு எப்படிப் பயணிக்கும் என்பது முக்கியமான ஒரு விஷயம். பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஒரு சட்டப் பிரிவும், பாலியல் வன்கொடுமைக்கு வேறு ஒரு பிரிவும் உள்ளன.

பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை பாலியல் குற்றங்களிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் (prevention of women sexual harrasment act) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். பாலியல் வன்கொடுமை என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும். இந்த வழக்குகளைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டவர் அல்லது குற்றம் சாட்டுபவர்களுக்குக் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. குற்றம்சாட்டப்படுபவர்கள்தாம், தாங்கள் குற்றமிழைக்கவில்லை என்று நிரூபிக்கவேண்டிய அவசியம் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் அதைத்தான் வலியுறுத்துகிறது. குறிப்பாக, பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் தனிமையில்தான் நடக்கின்றன. அதற்கு, எல்லா நேரங்களிலும் ஆதாரங்களை வைத்திருக்க முடியாது. எனவே, அது தொடர்பாக புகார்கள் அளிக்க ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை.

சின்மயி, லீனா மணிமேகலை போன்றவர்கள் பாலியல் குற்றங்களிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் என்ற சட்டப் பிரிவின் கீழ் புகார் அளிக்கலாம். பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் நிரூபிக்கப்படும் நிலையில் 3 வருடங்கள் முதல் 7 வருடங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உதவியுடன் பாலியல் தொல்லை அளிப்பவர்களுக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை வழங்கமுடியும். தெலுங்கு நடிகை ஶ்ரீரெட்டி எழுப்பும் பிரச்னையைப் பொறுத்தவரையில், பெண்களை ஏமாற்றி பாலியல் ஆசைக்கு இணங்கவைத்தல் (sexual exploitation) என்ற அடிப்படையில் புகார் அளிக்க முடியும்" என்று தெரிவித்தார். 

டெல்லியில் நிர்பயா, காஷ்மீர் சிறுமி சீரழிப்பு போன்ற நாட்டையே உலுக்கிய விவகாரங்களில்கூட, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், இதுபோன்று தனிமையில் நடக்கும் பாலியல் சீண்டல்களுக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்பதுதான் பாதிக்கப்படுபவர்கள் ஒவ்வொருவரின் கேள்வியாகவும் உள்ளது.