Published:Updated:

`இந்த பைக் வேண்டாம்; தங்கச் செயின் வேணும்!’ - வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டாருக்கு நேர்ந்த கதி

`இந்த பைக் வேண்டாம்; தங்கச் செயின் வேணும்!’ - வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டாருக்கு நேர்ந்த கதி
`இந்த பைக் வேண்டாம்; தங்கச் செயின் வேணும்!’ - வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டாருக்கு நேர்ந்த கதி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வரதட்சணை கேட்டு தொந்தரவு கொடுத்த மணமகன், அவரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரின் தலையை மணமகள் குடும்பத்தினர் மொட்டை அடித்ததாகப் புகார் எழுந்திருக்கிறது. 

Photo Credit:ANI

லக்னோவின் குர்ரம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே, மணமகன் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. பைக் வாங்கிக்கொடுத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என மணமகன் கூறியிருக்கிறார். காய்கறி விற்பனை செய்துவரும் மணமகளின் தந்தை, திருமணத்தன்று மணமகனுக்கு பல்சர் பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால், தனக்கு அப்பாச்சி பைக்தான் வேண்டும் என மணமகன் கேட்டதாகத் தெரிகிறது. அதை மாற்றித் தருவதாக மணமகள் வீட்டில் உறுதியளித்த பின்னர், தனக்கு தங்கச் செயின் வேண்டும் எனப் புதிதாக ஒன்றை மணமகன் தரப்பில் கேட்டதாகத் தெரிகிறது. இதனால், மணமகள் வீட்டார் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

வரதட்சணையாகக் கேட்டவற்றை வழங்காவிட்டால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனக் கூறி மணமகன் வீட்டார், மண்டபத்தை விட்டு வெளியேற முயன்றிருக்கின்றனர். அப்போது மணமகன், அவரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரை மணமகள் வீட்டார் சிறைபிடித்தனர். அவர்களை அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று மொட்டையடித்த மணமகளின் உறவினர்கள், பின்னர் போலீஸில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய மணமகளின் பாட்டி, ``திருமணத்துக்கு 5 நாள்களுக்கு முன்னர் வரதட்சணை வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். ஆனால், அதைக் கொடுக்க முடியாது என நாங்கள் மறுத்த பிறகு, திருமணத்தையே நிறுத்திவிட்டார்கள். அவர்கள் தலையை மொட்டையடித்தது யார் என்பது தெரியாது’’ என்று கூறினார்.