Published:Updated:

சபரிமலை தீர்ப்புக்கு ஆதரவு - ஆசிரமத்துக்கு தீ வைத்த மர்மநபர்கள்

சபரிமலை தீர்ப்புக்கு ஆதரவு - ஆசிரமத்துக்கு தீ வைத்த மர்மநபர்கள்
சபரிமலை தீர்ப்புக்கு ஆதரவு - ஆசிரமத்துக்கு தீ வைத்த மர்மநபர்கள்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த சுவாமி சந்தீபநந்தா ஆசிரமத்தில் இருந்த கார்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 

புகழ்பெற்ற கேரள சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் எனச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளா உட்பட அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு போன்ற இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஐப்பசி மதம் பூஜைக்காக கடந்த 17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டது முதல் அடுத்த ஐந்து நாள்களுக்குப் பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயல்வதும் அங்கே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் மீண்டும் திரும்புவதுமாக இருந்தனர். 

நடை திறக்கப்பட்டிருந்த 5 நாள்களும் நிலக்கல், பம்பை, சபரிமலை சந்நிதானம் ஆகிய இடங்களில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சபரிமலைக்குப் பெண்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்திப் பல பிரச்னைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. 

கேரளா திருவனந்தபுரத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி சந்தீபநந்தா கிரி. இவர் சில தினங்களுக்கு முழு சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை இவரது ஆசிரமத்தில் இருந்த கார்கள், இருசக்கர வானங்களுக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததன் விளைவாகவே இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சபரிமலை விவகாரம் தொடர்பாக தனக்கு மிரட்டல் வந்ததாக சுவாமி சந்தீபநந்தா தெரிவித்துள்ளார். 

ஆசிரமம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், ``உங்களின் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவதற்குத் தாக்குதல் தீர்வாகாது. சட்டத்தை தங்கள் கையில் எடுக்க ஒருபோதும் அரசு அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.