Published:Updated:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரின் உருவப்படம் எரிக்க முயற்சி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரின் உருவப்படம் எரிக்க முயற்சி!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரின் உருவப்படம் எரிக்க முயற்சி!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு  இயக்க ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமாபாபுவின் உருவப் படத்தை அவரது வீட்டு முன்பு மீனவர்கள் சிலர் எரிக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறை போராசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாத்திமா பாபு. `வீராங்கனை அமைப்பு' என்ற அமைப்பைத் தொடங்கி பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என உருவாக்கப்பட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான  இவருடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட மத்திய வியாபாரிகள் சங்க நிர்வாகி தெர்மல் ராஜா என்பவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி தூத்துக்குடியில் வைரலாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து பேராசிரியை பாத்திமா பாபுவை போனில் தொடர்புகொண்டு பேசினோம், ``ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நான் பணத்துக்காக விலை போய் விட்டதாக என் மீது பலரும் பழி சுமத்தினார்கள். என் ஒழுக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.யிடம் புகார் அளிக்க உள்ளேன்” என்றார். ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நீங்கள் தானே? என்ற கேள்விக்கு மெளனம் காப்பதும் மழுப்புவதுமே அவரின் பதிலாக இருந்தது. எஸ்.பி.-யிடம் புகார் மனு அளிப்பதாகக் கூறியவர் கடைசி வரையில் காவல் நிலையத்தில் கூட புகார் அளிக்க வரவில்லை.  

இந்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி சின்னக்கோயில் அருகில் பெரியகடைத் தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு பாத்திமா பாபுவின் உருவபொம்மை எரிக்கப்பட உள்ளதாக  தகவல் வெளியானது. இதையடுத்து, மத்தியபாகம் காவல் நிலைய போலீஸார் மற்றும் பத்திரிகையாளர்கள் பாத்திமாபாபுவின் வீட்டின் முன்பு குவிந்தனர். தூத்துக்குடி மாநகராட்சி 32வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கோல்டன் மற்றும் அவருடன் வந்த 10 பேர் பேராசிரியை பாத்திமா பாபுவின் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். அதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். `மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்திய பாத்திமா பாபுவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்ற வாசகம் தாங்கிய தாளை எரித்தனர். தொடர்ந்து போலீஸார் அவர்களை வெளியேற்றினர்.

இதில் கலந்துகொண்ட கோல்டனிடம் பேசினோம், ``பாத்திமா பாபு, தான் மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவர் எனச் சொல்லி எல்லா போராட்டங்களிலும் மீனவ சமுதாயத்தை முன்னிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தெர்மல் ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹோட்டலில் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இது மீனவ சமுதாயப் பெண்களுக்கும் அவமானமாக உள்ளது. அக்கா.. என கூப்பிட்டு மதிப்பாக வைத்திருந்தோம்.

ஓய்வு பெற்றும் 63 வயதான பாத்திமாபாபுவுக்கு இதெல்லாம் தேவையா. வீடியோவில் இருப்பது அவர் இல்லை என்றால், இதுவரை மறுப்பு தெரிவிக்காதது ஏன். உடனடியாக அவர் தூத்துக்குடியை விட்டே வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே அவரை வெளியேற்றுவோம்” என்றார். பாத்திமாபாபு குறித்த இந்த சர்ச்சை வீடியோ மீனவ சமுதாய மக்களியையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.