Published:Updated:

`எனக்கு ஆயிரம் பிரச்னை இருக்கு... பாடினது தப்பா?’ - கலங்கும் சென்னை போலீஸ் துணை கமிஷனர் 

`எனக்கு ஆயிரம் பிரச்னை இருக்கு... பாடினது தப்பா?’ - கலங்கும் சென்னை போலீஸ் துணை கமிஷனர் 
`எனக்கு ஆயிரம் பிரச்னை இருக்கு... பாடினது தப்பா?’ - கலங்கும் சென்னை போலீஸ் துணை கமிஷனர் 

காக்கி சீருடையில் இருக்கும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவர் பாடும் பாடல், வசனம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

சமீபகாலமாக, சென்னை போலீஸாருக்கு நேரம் சரியில்லை. சில தினங்களுக்கு முன், போக்குவரத்து காவலர் தர்மன் என்கிற தர்மராஜன் பைக்கில் செல்லும்போது இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் மடக்கினார். அதில் காவலர் தர்மராஜன் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் சிசிடிவி-யில் பதிவானது. அது, சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்தச் சம்பவத்தை விசாரித்த போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், இன்ஸ்பெக்டர் ரவிசந்திரனை ஆயுதப்படைக்கு இடமாற்றியதோடு பணியிடை நீக்கம் செய்தார். இந்தச் சம்பவம் ஓய்ந்தநிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் பாட்டு பாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. 

`முகம் பார்க்க நானும்... முடியாமல் நீயும்' என்ற பாடலை போலீஸ் சீருடையில் இருக்கும் ஒருவர் பாடும் வீடியோ வைரலாகிவருகிறது. இந்த வீடியோவைத் தொடர்ந்து `ஏன் அழுற உனக்குத்தான் யாருமில்ல...’ என்று தொடங்கும் வசனத்தையும் பேசுகிறார். இந்த வீடியோ பதிவின்போது அவர் சீருடையில் இல்லை. இந்த இரண்டு வீடியோக்கள்தான் காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. யார் அவர் என்று விசாரித்தபோது, சென்னை ஆயுதப்படையில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றும் சோமசுந்தரம் என்று தெரியவந்தது. அவரிடம் பேசினோம். 

``மக்களுக்காக 24 மணி நேரமும் சேவை செய்துவரும் பணியில் ஒவ்வொரு போலீஸாரும் ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஒவ்வொருவருக்கும் பிரச்னைகள் இருக்கும். அதுபோலத்தான் எனக்கும் சில பிரச்னைகள் உள்ளன. வீட்டில் என்னுடைய மகனின் ஆசைக்காக நான் பாடினேன். அதை என் மகன் வீடியோ எடுத்தான். அந்த வீடியோவால் யாருக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை. மனம் புண்படுகிற வகையில் அந்த வீடியோவில் எதுவும் இல்லை. திறமையைப் பாராட்ட வேண்டும். அதைவிட்டுவிட்டு எனக்கு மனஅழுத்தத்தை அதிகப்படுத்திவிட்டார்கள். ஒருவரை காலி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள். 

சம்பவத்தன்று மகனின் ஆசைக்காக நான் பாடிக்கொண்டே  யூனிபார்மை கழற்றினேன். அதற்குள் அதை அவன் வீடியோ எடுத்துவிட்டான். வீடியோ வெளியானதால் நானும் என் குடும்பத்தினரும் கடும் மனஉளைச்சலில் உள்ளோம். நான் நிம்மதியாக ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறேன். நான் பாட்டு பாடினது தவறா... சார், ஒரு பாட்டு பாடினால் என்ன தவறு’’ என்றார் வேதனையுடன். 

தொடர்ந்து வீடியோ எப்படி வெளியானது என்று கேட்டதற்கு, ``அதுதான் சார் தெரியல. வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ எப்படி வெளியானது என்பதுதான் என்னுடைய கேள்வி. வீடியோவைப் பார்த்தவர்கள் நல்லவிதமாகத்தான் கமென்ட்ஸ் கொடுத்துள்ளார்கள். மனஉளைச்சலில் எத்தனை போலீஸ்காரர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவ்வாறு குடும்பத்தில் ரிலாஸ்க் செய்தால்தான் மனதில் உள்ள சுமை குறையும். நான் எப்போதும் சோசலிஸமாக இருப்பேன். ஆயுதப்படையில் என்னுடைய கடமையை சரியாகச் செய்துவருகிறேன்'' என்றார்.